கோவை சாய்பாபா காலனி கழிவுநீர் தொட்டியில் விழுந்த 2 ஊழியர்கள் : 6 மணி நேரமாக தொடரும் மீட்புப் பணி - மாநகராட்சி ஆணையர் மற்றும் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்து உறவினருக்கு ஆறுதல் !!!
தலை இடித்ததில் நிலைதடுமாறி விழுந்த அர்ஜுன்குமார் - காப்பாற்றச் சென்ற சுரேஷுக்கும் மூச்சுத் திணறல் ...
கோவை மாநகராட்சி 69-வது வார்டுக்கு உட்பட்ட சாய்பாபா காலனி பாரதி பார்க் பகுதியில் அமைந்து உள்ள கழிவுநீர் உந்து நிலையத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் ஊழியர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது....
15 அடி விட்டமும், 40 அடி ஆழமும் கொண்ட பிரம்மாண்ட கழிவு நீர் தொட்டியில் பழுதான 60 எச்.பி மோட்டாரைப் பொருத்தி விட்டு மேலே ஏறிக்கொண்டு இருந்த போது, ரத்தினபுரியைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர் அர்ஜுன்குமார் (38) எதிர்பாராத விதமாகத் தலை இடித்துத் தொட்டிக்குள் தவறி விழுந்து உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக ஊழியரான பாப்பம்பட்டியைச் சேர்ந்த எலெக்ட்ரிசியன் சுரேஷ் (27) அவரை மீட்கத் கீழே இறங்கிய போது, நச்சு வாயுக்களால் ஏற்பட்ட கடும் மூச்சுத்திணறல் காரணமாக மயங்கி அவரும் 40 அடி ஆழக் கழிவு நீருக்குள் மூழ்கி உள்ளார்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் மற்றும் மாநகர காவல் ஆணையர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர்.
சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாகத் தீயணைப்புத் துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் மூலம் நீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு இடையில், தி.மு.க தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி சம்பவ இடத்திற்கு வருகை தந்து, மீட்புப் பணிகளைப் பார்வையிட்டதுடன், கண்ணீருடன் காத்து இருக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இரவு நேரத்திலும் வெளிச்சம் அமைத்துத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், 25 அடிக்கும் மேல் தேங்கி உள்ள கழிவுநீரை முழுமையாக அகற்றாமல் இருவரின் நிலையை உறுதி செய்ய முடியாது என்பதால், அப்பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: