சனி, 4 ஏப்ரல், 2026

50-வது முறை களத்தில் 'ஜனநாயகப் போராளி' நூர் முகமது: மொட்டை அடித்து, மிளகாய் மாலை அணிந்து விநோத மனுத் தாக்கல்!!!

SHARE

50-வது முறை களத்தில் 'ஜனநாயகப் போராளி' நூர் முகமது: மொட்டை அடித்து, மிளகாய் மாலை அணிந்து விநோத மனுத் தாக்கல்!!!

​"ஓட்டுக்குக் காசு வாங்கினால் பிச்சைக்காரர்கள் ஆவோம்!" - கோயம்புத்தூரின் 'விழிப்புணர்வு மனிதர்' நூர் முகமதுவின் அதிரடி என்ட்ரி!

கோயம்புத்தூர் மாவட்டத்தின் தேர்தல் களம் என்றாலே, அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் ஒரு பெயர் 'நூர் முகமது'. கோவை, கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் தனது 50-வது முறையாக வேட்புமனுத் தாக்கல் செய்து உள்ள 68 வயது நூர் முகமது, இம்முறையும் தனது விநோதமான போராட்ட வடிவால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்து உள்ளார். மொட்டை அடித்த தலையில் மிளகாய் மாலை அணிந்து, கையில் பிச்சை பாத்திரத்துடன், வண்டியில் இழுத்து வரப்பட்ட அவர் செய்த விழிப்புணர்வு பிரச்சாரம், செய்த சம்பவம் அரங்கேறியது.

​"வாக்காளர்களைப் பிச்சைக்காரர்களாக்கும் அரசியல் தந்திரங்களை முறியடிக்கவே இந்த வேடம்" எனப் பிரகடனம் செய்த அவர், தான் கடந்த 1997-ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவம் கொண்டவர் என்பதையும் நினைவுபடுத்தினார். இதுவரை ஜனாதிபதி தேர்தல் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை சுமார் 49 முறை போட்டியிட்டுள்ள அவர், இதற்காகத் தனது சொந்தப் பணத்தில் சுமார் 8 லட்சம் ரூபாயை விழிப்புணர்வுக்காகச் செலவிட்டு உள்ளார். கடந்த காலங்களில் சவப்பெட்டியுடன் வந்து ஓட்டுக்குக் காசு வாங்குவதன் அபாயத்தை உணர்த்தியவர், இம்முறை பிச்சை பாத்திரத்துடன் வந்து, "இலவசங்களுக்கு அடிமையாகாதீர்கள்" எனத் தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமல்ல, வாக்காளர்களுக்கும் ஒரு பாடத்தை எடுத்துரைத்து உள்ளார்.

​அரசியல் கட்சிகள் வழங்கும் இலவசங்களும், பணமும் ஒரு கட்டத்தில் நம்மைப் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளிவிடும் என்பதை வலியுறுத்துவதே தனது நோக்கம் என நூர் முகமது கூறுகிறார். கல்வி மற்றும் மருத்துவம் அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் இவர், எந்தவிதப் பதவியையும் விட, மக்களின் விழிப்புணர்வே நாட்டின் உண்மையான பலம் என நம்புகிறார். 50 முறை வேட்புமனு தாக்கல் செய்து தோற்றாலும், தன் ஜனநாயகக் கடமையையும் சமூக அக்கறையையும் சளைக்காமல் செய்து வரும் நூர் முகமது, கோவை தேர்தல் வரலாற்றில் ஒரு தனித்துவமான மனிதராகத் திகழ்கிறார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: