சனி, 4 ஏப்ரல், 2026

கரகாட்டம், செண்டை மேளம், கலை நிகழ்ச்சிகள் என உற்சாக ஊர்வலம்: "த.வெ.க vs தி.மு.க - விஜய் முதல்வர் ஆவது உறுதி" - கோவையில் தேர்தல் களத்தைச் சூடாக்கிய வேட்பாளர் !!!

SHARE

 கரகாட்டம், செண்டை மேளம், கலை நிகழ்ச்சிகள் என உற்சாக ஊர்வலம்: "த.வெ.க vs தி.மு.க - விஜய் முதல்வர் ஆவது உறுதி" - கோவையில் தேர்தல் களத்தைச் சூடாக்கிய வேட்பாளர் !!!

கோவை, சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள வழக்கறிஞர் கே.எஸ்.ஶ்ரீ கிரி பிரசாத், இன்று தனது தேர்தல் பயணத்தை எழுச்சியுடன் தொடங்கி உள்ளார். 

சிங்காநல்லூர் உழவர் சந்தையில் இருந்து கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம் வரை, செண்டை மேளங்கள் முழங்க, கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ அவர் சென்ற ஊர்வலம், அப்பகுதி பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்தது. 

தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

​"ஒரு வழக்கறிஞராக இதுவரை நான் செய்த மக்கள் பணிகளை, இனி ஒரு அரசியல் களத்தில் நின்று அதிகார பூர்வமாகச் செய்ய த.வெ.க எனக்கு வாய்ப்பு அளித்து உள்ளது" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்த ஶ்ரீ கிரி பிரசாத், தொகுதியின் தற்போதைய சூழல் குறித்துக் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

 "மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கூட முறையாகச் சென்றடையவில்லை. எனவே, இத்தேர்தல் களம் என்பது த.வெ.க-விற்கும், ஆளும் தி.மு.க-விற்கும் இடையிலான நேரடிப் போட்டியாகும்" என்று அவர் அதிரடியாகக் குறிப்பிட்டார்.

​இளைஞர்களின் பேராதரவு மற்றும் எழுச்சி, தலைவர் விஜய்யைத் தமிழகத்தின் அடுத்த முதல்வராக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை எனத் தன்னம்பிக்கையுடன் கூறிய அவர், மாற்றத்தை விரும்பும் சிங்காநல்லூர் தொகுதி வாக்காளர்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என உறுதிபடத் தெரிவித்தார்.

 வழக்கறிஞர் பின்னணியில் இருந்து களமிறங்கி உள்ள இவரின் அரசியல் வருகை, சிங்காநல்லூர் தொகுதியின் வாக்கு வங்கியில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: