வியாழன், 2 ஏப்ரல், 2026

கோவை என் ஊர்" ; கொங்கு மண்டலத்தில் வாக்குச் சேகரித்த ஸ்டாலின் - செந்தில் பாலாஜி வெற்றி குறித்து உறுதி !!!

SHARE

 கோவை என் ஊர்" ; கொங்கு மண்டலத்தில் வாக்குச் சேகரித்த ஸ்டாலின் -  செந்தில் பாலாஜி வெற்றி குறித்து உறுதி !!!

"கோவை என் ஊர்... இது பழிவாங்கும் தேர்தல்" ; காப்பி அடித்த எடப்பாடி, தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் மோடி" - 200 தொகுதிகளை இலக்காகக் கொண்டு முதலமைச்சர் பிரச்சாரம் !!!

கோவை மாவட்டத்தில் உள்ள கோவை தெற்கு, கோவை வடக்கு, பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு, சூலூர் ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று கோவையில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

கோவை, கொடீசியா மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பேசும் போது, “

 கோவைக்கு கேட்ட நிதியெல்லாம் கொடுத்து உள்ளார் முதலமைச்சர். கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்கு தி.மு.க தான் தொடர்ந்து பங்களித்து வருகிறது. அவினாசி சாலை மேம்பாலத்தின் 85 சதவீத நிதியை ஒதுக்கியது தி.மு.க அரசு தான். தி.மு.க அரசின் திட்டங்களால், தி.மு.க கூட்டணிக்கு தான் வாக்கு என மக்கள் முடிவு செய்து விட்டனர். மற்றவர்கள் போல் வெற்று வாக்குறுதிகள் கொடுக்காமல், மகளிருக்கு ரூ.5 ஆயிரம் வங்கி கணக்கில் போட்டுவிட்டு, இப்போது மாதம் 2 ஆயிரம் ரூபாய் என அறிவித்து உள்ளார். அது நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்த தேர்தல் பழிவாங்கும் தேர்தல். 10 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணியை வெல்ல வைக்க வேண்டும்” என்றார்.

கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது

 “தி.மு.க ஆட்சி அமைந்த பின்னர் அதிக முறை வந்த மாவட்டம் கோவை தான். ஆட்சிக்கு வந்த போது, கொரோனா உச்சத்தில் இருந்தது. பிபி கிட் அணிந்து கொண்டு இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு செய்தேன். அரசு நலத்திட்ட நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக தொடர்ந்து கோவைக்கு வந்து கொண்டு இருந்தேன். கோவையும் எனது ஊர் தான் என நினைக்கிறேன். அதனால் தான் கோவைக்கு முதல் கட்ட பிரச்சாரத்திற்காக வருகை தந்து உள்ளேன். நினைத்ததை செய்து காட்டுபவர் தான் செந்தில் பாலாஜி. அதனால் தான் அவருக்கு கோவை தெற்கு தொகுதியில் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. கோவை வடக்கு தொகுதி வேட்பாளர் துரை செந்தமிழ் செல்வன் பாரம்பரிய தி.மு.க-காரர். சூலூர் தொகுதி வேட்பாளர் தளபதி முருகேசன், கிணத்துக்கடவு சபரி கார்த்திகேயன், பொள்ளாச்சி தொகுதியில் கொ.ம.தே.க வேட்பாளர் நித்தியானந்தம், வால்பாறை தொகுதி உறுப்பினர் குட்டி என்கிற சுதாகர், ஆகியோருக்கு வாக்களிக்க வேண்டும்.” என்றார்.

தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம் தொகுதி உறுப்பினர்கள் மேடைக்கு வரவில்லை. சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் பெற்ற வெற்றியைப் போல, இம்முறையும் முழுமையான வெற்றியை வழங்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் பல திட்டங்களை கொடுத்து உள்ளதால், உரிமையுடன் இதை கேட்கிறேன். செம்மொழி பூங்கா, ஜி.டி.நாயுடு மேம்பாலம், மேலும் 5 கிலோ மீட்டருக்கு நீட்டிக்க உள்ளோம்.

 ஆர்.எஸ்.புரத்தில் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானம், பில்லூர் 3 வது கூட்டு குடிநீர் திட்டம், உக்கடம் பேருந்து நிலையம், விசைத்தறி மின்சாரம் குறைப்பு, வெள்ளலூரில் தொல்லியல் ஆய்வு செய்யப்பட உள்ளது. காந்திபுரத்தில் 300 கோடி ரூபாய் மதிப்பில் முதலமைச்சரானதும் முதல் நிகழ்ச்சியாக திறப்பு விழா நடைபெறும். மதச்சார்பற்ற கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும். கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமில்லாமல், சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளோம். அ.தி.மு.க வை பார்த்து தேர்தல் அறிக்கையை காப்பி அடித்ததாக எடப்பாடி சொல்கிறார். ஆனால் தி.மு.க வின் திட்டங்களை, சாதனைகளை தேர்தல் அறிக்கையாக கொடுத்து உள்ளார். இந்த பிரச்சனைகள் எடப்பாடியின் முதலாளிக்கு அதிகம். வெளிநாடுகளில் வாழும் பிரதமர் மோடி தேர்தல் வந்து விட்டதால் அடிக்கடி தமிழகத்திற்கு வருகை தருகிறார். இதனால் தி.மு.க வின் குஷியாக உள்ளோம்.

 நாடாளுமன்ற தேர்தலுக்கு அவர் ரோடு ஷோ நடத்தியதால் 40 க்கு 40 வென்றோம். மோடியும், அமித்ஷாவும் மீண்டும் வந்தால் நாம் 200 தொகுதிகள் வெல்வது உறுதி. நம் பிரச்சார பீரங்கியாக இருந்த ஆளுநரை மாற்றி விட்டனர். பீகார் தேர்தலின் போது, தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுவதாக பொய் கூறி வாக்கு சேகரித்தார். இதை தமிழ்நாட்டில் சொல்ல பிரதமர் மோடிக்கு தைரியம் உள்ள்தா ? வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தின் மீது அவதூறாக பழி போட்டார்கள். ஒரிசாவிலும் தமிழர்களை எப்படி இழிவுபடுத்தினார்கள் ? பூரி ஜெகனாதர் கோயில் சாவி தமிழகத்திற்கு சென்று விட்டதாக கூறி தமிழர்களை திருடர்களாக சித்தரித்தனர்.

 தமிழகத்தின் வாகனத்திற்கு அனுமதி மறுத்ததால் தான் தமிழ்நாடு அவர்களை புறக்கணிக்கிறது.

கோவை மதுரை மெட்ரோ திட்டங்களை மறுத்தது மத்திய அரசு. மக்கள் தொகை 20 லட்சத்தை தாண்டி இருக்கும் என நன்றாக தெரிந்தும் மெட்ரோ திட்டத்தை வழங்கவில்லை. கோவையும், மதுரையும் தமிழ்நாட்டில் இருப்பதால் தான் புறக்கணிக்கிறார்கள். தேர்தல் வந்தால் மட்டும் இவர்களுக்கு தமிழகமும், கோவையும் ஞாபகம் வரும். தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணிப்பதால் தான் பாஜகவை மக்கள் புறக்கணிக்கிறார்கள், நீங்கள் என்ன தடுத்தாலும் மக்களுக்கான திட்டங்களை ஸ்டாலின் கொடுத்துக் கொண்டே இருப்பார். இந்த தேர்தலில் தி.மு.க தேர்தல் அறிக்கை தான் சூப்பர் ஸ்டார். தமிழ்நாட்டி எப்படி மாற்றி அமைக்க போகிறோம் என்பதை தெளிவாக கூறுவது தி.மு.க தேர்தல் அறிக்கை.” என்றார்.

மேலும், “விவசாயிகளுக்கு இலவச பம்ப் செட்டுகள் என்ற அறிவிப்பால், கோவையில் நலித்திருக்கும் பம்ப் மோட்டார் தொழில் மீளும். சொல்வதை செய்வோம், செய்வதை தான் சொல்வோம். கோவை மக்கள் 10 க்கு 10 இந்த முறை வழங்க வேண்டும். இது தி.மு.க கூட்டணிக்கான வாக்கு மட்டும் அல்ல, வளர்ச்சிக்கான வாக்கு. இந்திய அளவில் சாதித்து விட்டு நாங்கள் வாக்கு கேட்க வந்து இருக்கிறோம். தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா ? என்ற இந்த போரில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியைத் தான் மக்கள் ஆதரிக்க வேண்டும். கோவையே தயாரா ? கோவை மென்மேலும் வளர நீங்கள் துணை நிற்க வேண்டும். எங்கள் சாதனையை நாங்களே முறியடிக்கும் வகையில் செயல்பட உள்ளோம்” என்றார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: