போலீஸுக்கே போக்கு காட்டிய போதை ஆசாமி; ரோந்து வாகனத்தை கடத்திச் சென்றதால் பரபரப்பு !!!
சென்னை காவல் துறைக்கு சொந்தமான ரோந்து வாகனத்தை போதை ஆசாமி கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எப்போதுமே பரபரப்பாக காணப்படும் பகுதி. தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான வெளிமாநிலத்தவர்கள் தினந்தோறும் சென்ட்ரல் ரயில் நிலையம் மூலமாக சென்னை வருவது வழக்கம்.
எனவே இங்கு 24 மணிநேரமும் போலீசார் ரோந்து வாகனங்களின் மூலம் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு இருப்பர். அந்த வகையில், நேற்று மாலையும் போலீசார் அங்கு ரோந்து சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது ஒரு ரோந்து வாகனத்தில் இருந்த போலீசார், வண்டியை நிறுத்தி வி்ட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது. வண்டியை ஓட்டிய காவலர், சாவியை எடுக்க மறந்து விட்டார்.
அந்த நேரத்தில் அங்கு வந்த போதை ஆசாமி ஒருவர், போலீஸ் கார் சாவியுடன் இருப்பதை பார்த்து உள்ளார். பின்னர் திடீரென ரோந்து வாகனத்தில் ஏறிய அவர், வண்டியை ஸ்டார்ட் செய்து அங்கு இருந்து கடத்திச் சென்றார்.
தங்கள் ரோந்து வாகனத்தை யாரோ ? ஒருவர் எடுத்து செல்வதை பார்த்த போலீசார், துரத்திச் சென்று வழி மறிக்க முயன்றனர். ஆனால், போதை ஆசாமியோ மின்னல் வேகத்தில் ரோந்து வாகனத்தை ஓட்டிச் சென்று விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அருகில் உள்ள போக்குவரத்து காவல்துறையினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கடத்திச் செல்லப்பட்ட ரோந்து வாகனம் செல்லும் வழியில் போக்குவரத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.
ஆனால், அதற்கு உள்ளாக ஒரு சிக்னலில் நின்று கொண்டு இருந்த மற்றொரு காரின் மீது போதை ஆசாமி போலீஸ் ரோந்து வாகனத்தை வேகமாக மோதினார்.
இதில், அந்த காரில் இருந்த பெண் மற்றும் ஓட்டுநர் காயம் அடைந்தனர். இதனால் பயந்து போன போதை ஆசாமி, போலீஸ் வாகனத்தை விட்டு இறங்கி ஓடினார்.
அப்போது அங்கு இருந்த போலீசார், அவரை துரத்திச் சென்று பிடித்தனர். பின்னர் அந்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவரது பெயர் லிஜோ ஜோசப் (20) என்பதும், சென்னை பல்லாவரத்தில் தங்கி தனியார் குடிநீர் ஆலையில் பணி புரிந்து வருவதும் தெரியவந்தது.
மது போதையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறிய லியோ ஜோசப், சில நாட்களுக்கு முன்பு தனக்கும், போக்குவரத்துக் காவலர் ஒருவருக்கும் நடந்த பிரச்சனையை மனதில் இந்த செயலை செய்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இதை அடுத்து, இந்த சம்பவம் குறித்து பெரியமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே காவல்துறை ரோந்து வாகனம் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 கருத்துகள்: