வியாழன், 30 ஏப்ரல், 2026

'மு.க அழகிரியை தி.மு.க வில் சேருங்க'; செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு !!!

SHARE

 'மு.க அழகிரியை தி.மு.க வில் சேருங்க'; செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு !!!

 மு.க. அழகிரியை தி.மு.க வில் சேர்க்க வலியுறுத்தி கோவில்பட்டியில் 100 அடி செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சண்முகா நகரைச் சேர்ந்தவர் ஜான் (57). இவரது சொந்த ஊர் மதுரை. கோவில்பட்டி, சண்முகா நகரில் தங்கியிருக்கும் இவர், மோட்டார் வாகன உரிமம் பெறுவது, புதுப்பித்தல், டிரைவிங் லைசென்ஸ் பெறுவது தொடர்பான ஆலோசகராக பணி புரிந்து வருகிறார்.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு. க. அழகிரியை தி.மு.க வில் சேர்க்க வலியுறுத்தி, தாமஸ் நகரில் உள்ள 100 அடி உயரம் உள்ள தனியார் செல்போன் டவரில் ஏறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் அவர் கையில் பெட்ரோல் கேனையும் கொண்டு சென்றிருந்த நிலையில் தீக்குளிக்க போவதாகவும் மிரட்டல் விடுத்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து, உடனடியாக அங்கு சென்ற போலீசார், அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது மாரியப்பன் என்ற காவலர், அவரிடம் தன்மையாக பேசி, பெட்ரோல் கேனை கீழே போட வைத்தார். இதன் இடையே அவரை மீட்பதற்காக தீயணைப்பு துறையினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர்.

அவரிடம் காவல் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் தொடர் பேச்சுவார்த்தை நடத்தியதில் கீழே இறங்க அவர் சம்மதம் தெரிவித்தார். ஆனால், வெயில் அதிகமாக இருப்பதால் தன்னால் கீழே இறங்க முடியவில்லை என்று ஜான் கூறியதால், தீயணைப்புத் துறையினர் செல்போன் டவர் மீது ஏறி, அவரை பத்திரமாக மீட்டு கீழே இறக்கினர்.

கீழே அழைத்து வரப்பட்ட ஜானிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கோவில்பட்டியில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த காலங்களில் தி.மு.கவில் உட்கட்சி பிரச்சினை இருந்து வந்தது. மு.க ஸ்டாலினை தி.மு.க வின் தலைவராக்குவதற்கு மு.க அழகிரி எதிர்ப்பு தெரிவிக்கவே, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி, 2014ஆம் ஆண்டு தி.மு.க வில் இருந்து அவர் நீக்கப்பட்டார். மீண்டும் அவர் கட்சியில் இணையப் போவதாக அறிவித்த நிலையிலும், கட்சி தலைமை அவரை சேர்க்க விரும்பவில்லை.

இந்நிலையில், ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டாலினும், அழகிரியும் நேரில் சந்தித்து பேசிக்கொண்டனர். அப்போது, மீண்டும் அவர் கட்சியில் சேர்க்கப்படுவார் என்ற பேச்சு அடிபட்டது. இருப்பினும், இதுவரை மு.க அழகிரி தி.மு.க வில் சேர்க்கப்படவில்லை.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: