வியாழன், 30 ஏப்ரல், 2026

வாக்கு எண்ணும் மையங்களில் குழப்பம் ஏற்படுத்த தி.மு.க திட்டம்: த.வெ.க நிர்மல் குமார் பகிரங்க குற்றச்சாட்டு !!!

SHARE

 வாக்கு எண்ணும் மையங்களில் குழப்பம் ஏற்படுத்த தி.மு.க திட்டம்: த.வெ.க நிர்மல் குமார் பகிரங்க குற்றச்சாட்டு !!!

வாக்கு எண்ணும் மையங்களிலும் தி.மு.க வினர் தகராறு செய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக த.வெ.க இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்து உள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி சிவஞானம் ஆகியோரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வழங்கினார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் மே 4 ம் தேதி நடைபெறுகிறது. வாக்குப் பதிவு நடைபெறும் அனைத்து இடங்களிலும் கூடுதல் பாதுகாப்பு செய்துத் தர வேண்டுமென தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து கோரிக்கை விடுத்து உள்ளோம். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான அரசு ஊழியர்கள் தபால் வாக்குகளை செலுத்தி உள்ளனர். இந்த தபால் வாக்குகள் முறையாக எண்ணப்பட வேண்டும். அனைத்து தபால் வாக்குகளும் ஸ்கேனிங் செய்யப்பட்டு தபால் வாக்குகளின் ரெக்கார்டுகளை பராமரிக்க வேண்டும் என தெரிவித்து உள்ளோம்.

தபால் வாக்குகள் முழுவதுமாக காட்சி பதிவு செய்து எங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை கொடுத்து உள்ளோம். வாக்கு எண்ணிக்கையின் போது அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் தி.மு.க வினர் தகராறுகளை செய்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது. ஆகையால் வாக்கு என்னும் மையங்களில் மத்திய காவல் படையினர் மூலம் கூடுதல் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளோம்.

தபால் வாக்குகள் முழுவதுமாக ஸ்கேன் செய்து, அவை முழுவதுமாக எண்ணப்பட்ட பிறகே கடைசி இரண்டு சுற்று மின்னணு வாக்குப் பதிவு எண்ணிக்கை நிறைவடைய வேண்டும். இதுகுறித்து அனைத்து ஆர்.ஓ. அதிகாரிகளுக்கும் சர்குலர் அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொண்டு உள்ளோம். பல இடங்களில் தபால் வாக்குகளை இறுதியாக எண்ணுவதற்கான முயற்சிகள் நடைபெறுகிறது. சட்டப்படி இதற்கு அனுமதி இல்லை. ஆகையால் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க வினர் எந்த சூழ்ச்சியையும், குளறுபடிகளையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனை தடுப்பதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என கடிதம் வழங்கி உள்ளோம்" என்று நிர்மல் குமார் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: