வியாழன், 30 ஏப்ரல், 2026

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது ஏன் ? வெளியான தீர்ப்பு விவரம் !!!

SHARE

 டிரான்ஸ்பார்மர் கொள்முதல் வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது ஏன் ? வெளியான தீர்ப்பு விவரம் !!!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்த நிலையில், தீர்ப்பு விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

அந்த தீர்ப்பில், "டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்களின் மீது அரசு ஒப்புதல் பெற்று டான்ஜெட்கோ கொள்முதல் பிரிவு நிதி கட்டுப்பாட்டாளர் காசி என்பவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை, ஆரம்பகட்ட விசாரணையை மேற்கொண்டது. முடிவில் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என முடிவுக்கும் வந்தது.

காசி, டான்ஜெட்கோ நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி, முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் சில அரசு ஊழியர்களுக்கு எதிராக அறப்போர் இயக்கம் புகார் அளித்தது இருந்த நிலையில், டான்ஜெட்கோ கொள்முதல் பிரிவு நிதி கட்டுப்பாட்டாளர் காசிக்கு எதிராக மட்டும் விசாரணை நடத்தியது ஏன் என்பது தெரியவில்லை ? இதற்கு லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை அறிக்கையை பார்க்கும் போது ஆரம்ப கட்ட விசாரணை என்ற பெயரில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு உள்ளது தெளிவாகிறது. புகாரில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என லஞ்ச ஒழிப்புத் துறை கருதி இருந்தால், 44 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

வழக்குப் பதிவு செய்யாமலேயே ஒரு முழுமையான புலன் விசாரணையை லஞ்ச ஒழிப்புத் துறை நடத்தி உள்ளது.

ஆரம்பகட்ட விசாரணை நடத்துவதற்கு 20 மாதங்கள் தாமதம் ஏற்பட்டது குறித்தும் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அறப்போர் இயக்கத்தின் புகார்கள் 2023-லிருந்து நிலுவையில் உள்ள சூழ்நிலையில், 2026 ஏப்ரல் 4ஆம் தேதி புகார்களில் முகாந்திரம் இல்லை என கூறி புகாரை முடித்து வைத்தாக திடீரென லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்கை அளித்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

லஞ்ச ஒழிப்புத் துறை மற்றும் மாநில அரசு மேற்கொண்ட நடைமுறைகள் மக்களின் நம்பிக்கையை ஈர்க்க தவறிவிட்டது என்பதால், மாநில அரசு நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய புலன் விசாரணை அமைப்பை விசாரணை நடத்த அனுமதித்தால், அது மக்கள் மத்தியில் அது தீவிரமான அச்சத்தை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில் ஒரு சுதந்திரமான விசாரணை அவசியம் என்பதால், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்படுகிறது.

இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், வழக்கை சுதந்திரமான விசாரணை அமைப்புக்கு மாற்ற வேண்டுமா? என்பதை முடிவு செய்வதற்கு தானே தவிர, குற்றச்சாட்டுக்களின் தகுதி குறித்த முடிவாக கருத முடியாது" எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்து உள்ளனர்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: