10 நாட்களுக்குள் ஒப்பந்தம் இல்லையேல் ஈரான் மீது கடும் நடவடிக்கை : ட்ரம்ப் அதிரடி !!!
ஈரான் ஒரு அர்த்தம் உள்ள ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் இல்லையேல் மோஷமான விஷயங்கள் நடக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்து உள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற அமைதி வாரிய கூட்டத்தில் பேசிய டிரம்ப், இதனை கூறினார்.
அமெரிக்கா - ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். அதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், ஈரானுக்கு எச்சரிக்கை விடும் வகையில் அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் அந்நாட்டின் அருகே நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. அச்சுறுத்தலுக்கு எல்லாம் அடிபணிய மாட்டோம் என்றும் உங்களின் ராணுவத்தை அழிப்போம் என்றும் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமெனி அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட நவீன போர் விமானங்களை மேற்கு ஆசியா நோக்கி அமெரிக்கா அனுப்பி வைத்து உள்ளது.
புதிதாக அமைக்கப்பட்ட 'அமைதி வாரியத்தின்' (Board of Peace) முதல் கூட்டத்தை ட்ரம்ப் வாஷிங்டனில் நடத்தினார். இதில் காசா போர் நிறுத்தம் மற்றும் ஈரான் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப்,
அமெரிக்கா - ஈரான் இடையே சாத்தியமான ஒப்பந்தம் எட்டப்படுமா என்பது அடுத்த 10 நாட்களில் தெரிந்துவிடும் என்று கூறினார்.
நாம் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குவோமா அல்லது நிலைமையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோமா என்பது விரைவில் தெரியவரும் என்று அவர் குறிப்பிட்டார். அமைதி வாரியக் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார். "அவர்களிடம் அணு ஆயுதம் இருந்தால் மத்திய கிழக்கில் அமைதி நிலவாது என்பது மிகத் தெளிவான விஷயம் என்றார்.
இதுகுறித்து பேசிய அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ட்ரம்ப் விதித்து உள்ள சிவப்புக் கோடுகளை ஈரானியர்கள் இன்னும் முழுமையாக ஏற்கவில்லை என்று கூறினார். ஈரான் அணு ஆயுதங்களை வாங்குவதில் ஆர்வமாக உள்ளது என்பது பல விஷயங்கள் மூலம் தெளிவாகிறது. ராஜதந்திர வழியிலோ அல்லது வேறு வழியிலோ ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதைத் தடுப்பதே அதிபரின் நோக்கம் என்று வான்ஸ் தெரிவித்தார்.

0 கருத்துகள்: