லஞ்ச ஒழிப்புத் துறை டி.ஜி.பி யாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமனம் - 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் !!!
தமிழ்நாட்டில் 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட 20 பேர் பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை டி.ஜி.பி யாக டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
தமிழக காவல் துறையில் நிர்வாக மாற்றத்தின் ஒரு பகுதியாக 18 ஐ.பி.எஸ் அதிகாரிகள் உள்ளிட்ட மொத்தம் 20 உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. காவல் துறையின் செயல் திறனை மேலும் வலுப்படுத்தவும், நிர்வாக பணிகளை சீரமைக்கவும் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அதிகாரப் பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாற்றங்களின் அடிப்படையில் தற்போது ஆயுதப்படை டி.ஜி.பி யாக பணியாற்றி வந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஊழல் தொடர்பான புகார்கள் மற்றும் விசாரணைகளை தீவிரப்படுத்தும் நோக்கில் இந்த முக்கிய பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மாவட்ட அளவிலும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அய்மன் ஜமால் நியமிக்கப்பட்டு உள்ளார். அதே போல் ராணிப்பேட்டை மாவட்ட எஸ்.பி யாக சிபின் பொறுப்பேற்க உள்ளார். சட்டம் - ஒழுங்கு நிலையை வலுப்படுத்தும் வகையில் இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆவடி காவல் ஆணையரகத்தில் கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த பவானீஸ்வரி, சென்னை டி.ஜி.பி அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு உள்ளார். மேலும் தாம்பரம் காவல் ஆணையரகத்தில் சட்டம் - ஒழுங்கு இணை ஆணையராக ஜெயந்தி நியமிக்கப்பட்டு உள்ளார். காவல்துறையின் நவீன மயமாக்கல் பணிகளை முன்னெடுக்க டி.ஜி.பி அலுவலக நவீன மயமாக்கல் பிரிவு ஐ.ஜி யாக ரயில்வே ஐ.ஜி பாபு பொறுப்பேற்கிறார்.
இதனுடன் காத்து இருப்போர் பட்டியலில் இருந்த ஜெயராமன், சென்னை ஊர்க் காவல் படை ஏ.டி.ஜி பியாக நியமிக்கப்பட்டு உள்ளார். தொழில்நுட்ப சேவைகள் பிரிவின் டி.ஐ.ஜி யாக ஜெயலட்சுமி பொறுப்பேற்க உள்ளார். மாவட்ட மற்றும் மண்டல அளவிலான நிர்வாகத்தை சீர்படுத்தும் வகையில் பல சரகங்களிலும் புதிய டி.ஐ.ஜி கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதன்படி ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி யாக மணிவண்ணன், திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி யாக சசி மோகன், கோவை சரக டி.ஐ.ஜி யாக சாமிநாதன், திருச்சி சரக டி.ஐ.ஜி யாக சக்கரவர்த்தி, திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜி யாக விஜயலட்சுமி மற்றும் நெல்லை சரக டி.ஐ.ஜி யாக தேஷ்முக் சேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் காவல் துறையின் நிர்வாக செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தவும், சட்டம் - ஒழுங்கு பராமரிப்பை திறம்பட மேற்கொள்ளவும் இந்த பணியிட மாற்றங்கள் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பொறுப்புகளை ஏற்க உள்ள அதிகாரிகள் தங்களது பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்கள் சேவையை மேம்படுத்த முக்கிய கவனம் செலுத்துவார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

0 கருத்துகள்: