வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

தி.மு.க பேரூர் கழக செயலாளர் நியமனத்தில் சர்ச்சை ; சாதியப் பாகுபாடு பார்க்கும் மாவட்டச் செயலாளரை கண்டனம் - 8 வாக்குச்சாவடி முகவர்கள் தங்களை பொறுப்பில் இருந்து விடுவிக்க தலைமைக்கு கடிதம் !!!

SHARE

 தி.மு.க பேரூர் கழக செயலாளர் நியமனத்தில் சர்ச்சை ; சாதியப் பாகுபாடு பார்க்கும் மாவட்டச் செயலாளரை கண்டனம் - 8 வாக்குச்சாவடி முகவர்கள் தங்களை பொறுப்பில் இருந்து விடுவிக்க தலைமைக்கு கடிதம் !!!

கோவை தெற்கு மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி உட்பட்ட திருமலையாம்பாளையம் தேர்வு நிலை பேரூராட்சியில், பேரூர் கழக தி.மு.க செயலாளர் நியமனத்தில் சர்ச்சை எழுந்து உள்ளது.

திருமலையாம்பாளையத்தில் 15 கிளை கழகச் செயலாளர்கள் உள்ள நிலையில், கட்சி நிர்வாகிகளுக்கு தெரியாமல் புதிய பேரூர் கழக செயலாளரை, மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் தளபதி முருகேசன் நியமித்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. மாவட்ட செயலாளர் சாதிய மனப்பான்மையோடு செயல்படுவதை கண்டித்து, வார்டு செயலாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் தங்களை பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து திருமலையாம்பாளையம் தேர்வு நிலை பேரூராட்சியின் 2 வது வார்டு கவுன்சிலர் ரமேஷ்குமார் நம்மிடம் பேசியபோது, 

கடந்த 15 ஆண்டுகளாக தி.மு.க வில் உறுப்பினராகவும், பேரூர் கழக இளைஞர் அமைப்பாளராகவும், தற்போது 2 வது வார்டு கவுன்சிலராகவும் பணியாற்றி வருகிறேன். ஒன்றிய பிரதிநிதி மற்றும் பாகம் எண் 295-ன் பாக முகவராகவும் இருந்து வருகிறேன். கடந்த 6 தேர்தல்களில் வாக்குச்சாவடி முகவராக செயல்பட்டு உள்ளதாகவும் கூறினார். 

வருகின்ற சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகள் அனைத்தையும் நேற்று முடித்து கொடுத்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில், திருமலையாம்பாளையம் பேரூர் கழக செயலாளர் ராமராஜை மாற்றி சாதிய பாகுபாட்டோடு, கிருஷ்ணசாமியை நியமித்து உள்ளதாகவும், 15 கிளைச் செயலாளர்கள் மற்றும் கட்சியினரை ஆலோசிக்காமல் இந்த நியமனம் செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தி.மு.க ஒரு ஜனநாயகக் கட்சி என்றாலும், முன்பு தேர்தல் மூலம் நிர்ணயிக்கப்பட்ட பொறுப்புகள் தற்போது நியமன முறையிலும், சாதி அடிப்படையிலும் வழங்கப்படுகின்றன எனவும், கேள்வி எழுப்பும் செயல்பாட்டாளர்கள் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

இதனால், “பதவிகளோ, பொறுப்புகளோ, வேண்டாம், அடிப்படை உறுப்பினராகவே தொடர விரும்புகிறோம் என்ற நிலைக்கு வந்து உள்ளதாகவும், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி 295-ன் பாகமுகவர் மற்றும் ஒன்றிய பிரதிநிதி பொறுப்புகளில் இருந்து விடுவிக்க கோரி கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பி உள்ளதாகவும் கூறினார்.

திருமலையாம்பாளையம் பேரூராட்சியில் 11 பூத்துகளில் சுமார் 10,500 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 8 பூத்துகளில் பணியாற்றும், வாக்குச்சாவடி முகவர்கள் தங்கள் பொறுப்புகளைத் துறக்க முடிவு செய்து, கட்சியின் பொதுச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

 சமூக நீதிக்கட்சியிலேயே சாதி பார்த்து வழங்கப்படும் பதவியால், உண்மையான தொண்டர்கள் ஒதுக்கப்படுவது உடன்பிறப்புகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் கோவை மாவட்ட தி.மு.க வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: