வியாழன், 26 பிப்ரவரி, 2026

பயங்கரவாதத்தால் இந்தியாவும் பாதிக்கப்பட்டு உள்ளது - இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு !!!

SHARE

 பயங்கரவாதத்தால் இந்தியாவும் பாதிக்கப்பட்டு உள்ளது - இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு !!!

உலகின் எந்தவொரு மூலையில் பயங்கரவாதம் இருந்தாலும், அது அனைத்து இடங்களிலும் அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இரண்டு நாள் அரசு முறைப் பயணமாகப் பிரதமர் மோடி புதன்கிழமை இஸ்ரேல் சென்றார்.

ஜெருசலேமில் உள்ள அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையில் கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் படை நடத்திய காட்டுமிராண்டித் தனமான தாக்குதலில், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

பயங்கரவாதத்தால் இஸ்ரேலியர்களுக்கு ஏற்பட்ட வலியை இந்தியாவால் உணர முடியும். இஸ்ரேலின் துயரத்தை இந்தியா பகிர்ந்து கொள்கிறது. எந்தக் காரணத்தாலும் குடிமக்கள் கொல்லப்படுவதை நியாயப்படுத்த முடியாது. அதே போல பயங்கரவாதத்தையும் நியாயப்படுத்த முடியாது.

நீண்ட காலத்துக்கு முன்பு இந்தியாவும் பயங்கரவாதத்தால் ஏற்படும் வலியை அனுபவித்து உள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் பல அப்பாவிகள் உயிரிழந்தது இந்தியர்களுக்கு எப்போதும் நினைவில் உள்ளது. இஸ்ரேலை போல இந்தியாவும் இரட்டை நிலைப்பாடு இல்லாமல், பயங்கரவாதத்தை எள்ளளவும் சகித்துக் கொள்ளக் கூடாது என்ற மாறாத, சமரசமில்லாத கொள்கையைக் கொண்டு உள்ளது. 

சமுதாயத்தை நிலைகுலைய வைக்க வேண்டும், வளர்ச்சியைத் தடுக்க வேண்டும், நம்பிக்கையை அழிக்க வேண்டும் என்பதே பயங்கரவாதத்தின் நோக்கம். பயங்கரவாதத்துக்குப் பதிலடி அளிக்க நீடித்த, ஒருங்கிணைந்த உலகளாவிய நடவடிக்கை தேவைப்படுகிறது.

ஏனெனில் உலகின் எந்தவொரு மூலையில் பயங்கரவாதம் இருந்தாலும், அது அனைத்து இடங்களிலும் அமைதிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இதன் காரணமாகவே நீடித்த அமைதி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பங்களிக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கிறது.

காஸா அமைதித் திட்டத்துக்கு ஆதரவு: 

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முறைப்படி அங்கீகரித்த காஸா அமைதித் திட்டத்துக்குத் தனது உறுதியான ஆதரவை இந்தியா தெரிவித்து உள்ளது. 

பாலஸ்தீன விவகாரத்தை அணுகுவது உள்பட அந்தத் திட்டம் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் உறுதியான, நீடித்த அமைதியை ஏற்படுத்துவதற்கான உறுதிமொழியைக் கொண்டு உள்ளது.

அமைதிக்கான பாதை எப்போதும் எளிதாக இருந்ததில்லை. ஆனால், பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை ஏற்படுவதற்கும், பேச்சுவாா்த்தை நடத்துவதற்கும் இஸ்ரேலுடனும், உலகத்துடனும் இந்தியா இணைகிறது என்றார் பிரதமர் மோடி.

மிக உயரிய பதக்கம்:

 இந்தச் சொற்பொழிவின் மூலம், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்.

அவருக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் மிக உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. இந்தப் பதக்கத்தைப் பெற்ற முதல் உலகத் தலைவர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத் தலைவர் அமீர் ஒஹானா மோடிக்குப் பதக்கத்தை அணிவித்தார். இந்தியா-இஸ்ரேல் இடையிலான உத்திசார்ந்த உறவை வலுப்படுத்த பிரதமர் மோடி அளித்த மிகச் சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்தப் பதக்கம் வழங்கப்பட்டது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: