முதல்வர் ஸ்டாலின் இமேஜை கெடுக்க சூழ்ச்சி!’ ; கே.என்.நேரு விவகாரம் - தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம் !!!
இது குறித்து அமைச்சர் கே.என்.நேரு மற்றும் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ஆர்.எஸ்.பாரதி கூறும்போது,
“அமைச்சர் கே.என்.நேரு மீது சி.பி.ஐ விசாரணை நடந்து கொண்டு இருந்த போது, அமலாக்கத் துறை சில ஆவணங்களை எடுத்ததாகச் சொல்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அமைச்சர் நேரு சி.பி.ஐ வழக்கை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த முக்கிய வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
சி.பி.ஐ வழக்கு ரத்து செய்யப்பட்டதால் அமலாக்கத் துறையிடம் போதிய ஆதாரங்கள் இல்லை என்றாலும், அவர்கள் தமிழ்நாடு அரசை நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டனர். அமைச்சர் கே.என்.நேருவை கட்சியின் மூத்த தலைவர் என்றோ, கட்சியின் முதன்மைச் செயலாளர் என்றோ கூடப் பார்க்காமல் உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் விரிவான விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். தற்போது அந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு அரசு ஏற்கெனவே விசாரணை நடத்திக் கொண்டு இருப்பதைக் கருத்தில் கொண்டு, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய உத்தரவிட்டு உள்ளது. இது ஒன்றும் பின்னடைவு அல்ல, தி.மு.க வின் சட்டத் துறை இதனைச் சட்டரீதியாகச் சந்தித்து முறி அடிக்கத் தயாராக இருக்கிறது.
அமைச்சர் கே.என்.நேரு மீது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பல வழக்குகளை தொடுத்திருக்கிறார். அத்தனை வழக்குகளையும் எதிர்கொண்டு வென்று காட்டியவர் தான் கே.என்.நேரு. பா.ஜ.க அரசு சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறையை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தப்படுகிறது. முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரத்தை நள்ளிரவில் கைது செய்து 100 நாட்கள் சிறையில் வைத்தும், மூன்று ஆண்டுகள் ஆகியும் அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த 2016-ல் லாரிகளில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் வழக்கில் 10 ஆண்டுகள் ஆகியும் சி.பி.ஐ இதுவரை முதல் தகவல் அறிக்கையைக் கூடப் பதிவு செய்யவில்லை. இவை அனைத்தும் தேர்தல் நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க இமேஜைக் கெடுப்பதற்காகச் செய்யப்படும் சூழ்ச்சிகள். அமைச்சர் நேரு தற்போது 41 தொகுதிகளுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். அவரது தேர்தல் பணியைப் பார்த்துப் பொறாமைப்பட்டு எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனையின் பேரில் டெல்லியில் இருப்பவர்கள் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறார்கள்.

0 கருத்துகள்: