சனி, 21 பிப்ரவரி, 2026

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் பிளாஸ்டிக் விற்பனை : அதிகாரிகள் எச்சரிக்கை மீறி விற்பனையில் ஈடுபட்ட கடைக்கு சீல் - சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை !!!

SHARE

தென்கைலாயம்’ என்று போற்றப்படும் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில், தடை செய்யப்பட்ட நெகிழி (Plastic) பொருட்களைப் பயன்படுத்தி வந்த கடைக்கு அதிகாரிகள் இன்று அதிரடியாக சீல் வைத்தனர். 

சிவராத்திரி மற்றும் மே மாதம் வரை வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ள நிலையில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் மலை ஏறி வருகின்றனர். அடிவாரப் பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதை அடுத்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் மலைப் பகுதியின் இயற்கை வளத்தைப் பாதுகாக்கத் தீவிரக் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்தச் சூழலில், பிளாஸ்டிக் கவர்களைப் பயன்படுத்தும் கடைகளுக்கு முன்னதாகவே அதிகாரிகள் எச்சரிக்கை கொடுத்து நோட்டீஸ் (Notice) வழங்கி இருந்தனர்.

​அதிகாரிகளின் இந்த எச்சரிக்கை கொடுத்தும் கூட, அடிவாரத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட கடைகளில் மீண்டும், மீண்டும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் கவர்களைப் பயன்படுத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்தது. 

இந்நிலையில் திடீர் சோதனையின் (Surprise Raid) போது, அந்தக் கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் வைத்து இருந்த கடைகளுக்கு உடனடியாக சீல் வைத்து பூட்டுப் போட்டனர். 

"மலைப் பகுதியில் வீசப்படும் நெகிழிப் பொருட்கள் வன விலங்குகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதோடு, மண்ணின் வளத்தையும் பாதிக்கிறது. பிளாஸ்டிக் குவியலைத் தடுக்க இனி வரும் நாட்களிலும் இத்தகைய நடவடிக்கைகள் தொடரும்" என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

​வெள்ளியங்கிரி மலைக்கு வரும் பக்தர்கள் எக்காரணம் கொண்டும் பிளாஸ்டிக் பாட்டில்கள் அல்லது கவர்களைக் கொண்டு வர வேண்டாம் எனவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் வனத்துறை எச்சரித்து சோதனைக்கு பின்னரே மலையேற அனுமதிக்கின்றனர். 

 அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை, இயற்கை ஆர்வலர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: