சென்னை புறநகர் ரயில்கள் ரத்தானதால் மக்கள் அவதிக்கு உள்ளாவது பற்றி தி.மு.க எம்.பி. கனிமொழி பதிவு...
சென்னையில் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்வோர் கடுமையாக அவதிக்கு ஆளாகி உள்ளதாக தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கூறி உள்ளார்.
தென்னக ரயில்வே இதற்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"நாள்தோறும் லட்சக் கணக்கானவர்கள் பயன்படுத்தும் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த சில நாள்களாக பயணிகள் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டு வருவதும், அதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாவதும் வேதனை அளிக்கிறது.
ஏற்கனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், இன்றும் 49 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பது, அன்றாடம் பணிக்குச் செல்வோர் தொடங்கி பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை கடும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது.
குறிப்பாக வரும் வாரங்களில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், தென்னக ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்" என்று பதிவிட்டு உள்ளார் .

0 கருத்துகள்: