புதன், 25 பிப்ரவரி, 2026

கேரளா அல்ல கேரளம் : மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் !!!

SHARE

 கேரளா அல்ல கேரளம் : மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் !!!

கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்றுவதற்கான பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது...

கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என மாற்றுவதற்கான அம்மாநில அரசின் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை இன்று (பிப். 24) ஒப்புதல் அளித்து உள்ளது.

பெயரை மாற்றக்கோரி மாநில சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நிலையில், மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுடன் பேசும்போது :

அரசியலமைப்பு சட்டப்பிரிவு 3-ன் படி, மாநிலத்தின் பெயரை மாற்றக்கோரி கேரள மாநில சட்டப் பேரவையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது எனக் குறிப்பிட்டார்.

கேரளா என்ற பெயரை கேரளம் என மாற்றக் கோரி 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அம்மாநில சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இத்தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சகம் திருப்பி அனுப்பியது.

இதனைத் தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு உரிய திருத்தங்களுடன் மற்றொரு தீர்மானம், மாநில சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது கேரளா மாநில சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

கேரளத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பெயர் மாற்றத்திற்கான மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: