ஐந்து முனை அல்ல : 12 முனை போட்டி என்றாலும் கவலை இல்லை" - தி.மு.க எம்.பி கதிர் ஆனந்த் !!!
ஐந்து முனை, ஆறு முனை, பன்னிரண்டு முனை போட்டியை பற்றியெல்லாம் எங்களுக்கு கவலையில்லை என வேலூர் எம்.பி கதிர் ஆனந்த் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கள் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேலூர் மாவட்ட பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஷாலினி ஜானி மற்றும் அவரது கணவர் ஜானி தலைமையில் த.வெ.க, அ.தி.மு.க, பா.ஜ.க கட்சிகளில் இருந்து விலகிய 500-க்கு மேற்பட்டவர்கள் தி.மு.க வின் இணைந்தனர்.
வேலூர் வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளரும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் முன்னிலையில் தி.மு.க வின் தங்களை இணைத்து கொண்டனர். புதிதாக இணைந்தவர்களை பொன்னாடை போற்றி கதிர் ஆனந்த் வரவேற்றார்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தி.மு.க பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டு உள்ளது. ஒரு மகனாக உங்களின் மனநிலை என்ன என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “50 ஆண்டுக் காலத்திற்கு மேலாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து, பொன்விழா கண்டு இருக்கக் கூடியவர்.
அதுமட்டுமில்லாமல் கலைஞர் இருக்கும் போது பாராட்டு பெற்றவர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அவருக்கு ஒரு அற்புதமான புகழஞ்சலி செலுத்தி பாராட்டி இருக்கிறார். வியூகங்களுக்கு, கருத்துக்களுக்கு எல்லாம் பதிலளிக்கும் விதமாக முதலமைச்சரே வேட்பாளர் பட்டியலை அதிகாரப் பூர்வமாக வெளியிட்டு இருக்கிறார்.
ஒரு மாவட்ட கழகச் செயலாளராக கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதி மற்றும் காட்பாடி சட்டமன்றத் தொகுதி என இரண்டு தொகுதிகளில் தேர்தல் பணி கொடுக்கப்பட்டு உள்ளது. இரண்டு தொகுதியிலுமே ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டி. கண்டிப்பாக இரண்டு தொகுதியிலுமே ஒரு மாபெரும் வெற்றியை முதலமைச்சரிடம் சமர்ப்பிப்பேன்” எனக் கூறினார்.
மாவட்ட செயலாளராகப் பொறுப்பேற்று எதிர்கொள்ள உள்ள முதல் சட்டமன்றத் தேர்தலின் பணிகள் குறித்து கேள்விக்கு,
“தி.மு.க கிட்டத்தட்ட ஓராண்டு காலமாகவே தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகிறது. மாநாடுகள், பி.எல்.ஏ-2’ (BLA-2) மீட்டிங் அனைத்தும் முதலமைச்சர் தலைமையிலும், துணை முதலமைச்சர் தலைமையிலும் நடைபெற்றது. ஆகையால் கட்சி தோழர்கள் தயாராக இருக்கிறார்கள்.
ஒரு மாவட்டக் கழகச் செயலாளராக மட்டுமில்லை, நான் என்னுடைய அப்பா கூடவே பல தேர்தல்களில் வேலை செய்து இருக்கிறேன். அதனால் தேர்தல் வியூகங்கள் என்ன என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நானும் வேட்பாளராக இரண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு இருக்கிறேன். கிட்டத்தட்ட 12 தொகுதிகளில் போட்டியிட்டது போன்ற கணக்கு அது. ஆகையால் கண்டிப்பாக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மீண்டும் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக அரியணை ஏறுவார் என்பதில், எந்த மாற்றமும் கிடையாது” என பதிலளித்தார்.
தொடர்ந்து, த.வெ.க, வி.கே.சசிகலாவின் கட்சி ஆகியவற்றை மேற்கோள்காட்டி இந்த முறை 5 முனை போட்டி இருக்கிறது. எப்படி எதிர்கொள்ள உள்ளீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர்,
“ஐந்து முனை, ஆறு முனை, பன்னிரண்டு முனை போட்டியை பற்றியெல்லாம் எங்களுக்கு கவலையில்லை. எங்களுக்கு உதயசூரியனை ஜெயிக்க வைக்கணும், அவ்வளவு தான். அதனால் எத்தனை பேர் எங்களை எதிர்த்தாலும் சரி, அது மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ. எத்தனை முனைப் போட்டிகளாக வந்தாலும் சரி வெல்வது உறுதி” என கூறினார்.

0 கருத்துகள்: