இருசக்கர வாகன பெட்டியை உடைத்து ரூ.1.32 லட்சம் ரொக்கம் திருட்டு : பட்டப்பகலில் துணிகரம் - சி.சி.டி.வி காட்சிகள் கொண்டு தீவிர காவல் துறை தேடுதல் வேட்டை !!!
பொன்னை பேருந்து நிலையம் அருகே பட்டப் பகலில் இருசக்கர வாகனத்தில் உள்ள பெட்டியை உடைத்து, ரூ.1.32 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த ஒட்டநேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் உதயகுமார் - நர்மதா தம்பதியர். இந்நிலையில், நர்மதா தனது மாமியார் ராணியுடன் பொன்னை பகுதியில் உள்ள வங்கிக்கு பணம் எடுக்க இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார். வங்கியில் இருந்து ரூ.1 லட்சத்து 32 ஆயிரத்தை எடுத்த ராணி, அதை தனது மருமகள் நர்மதாவிடம் கொடுத்து உள்ளார்.
பணத்தை பெற்றுக் கொண்ட நர்மதா, அதனை தனது இருசக்கர வாகனத்தின் பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு, பொன்னை பேருந்து நிலையம் அருகில் உள்ள தபால் நிலையத்துக்கு சென்றதாக கூறப்படுகிறது. சுமார் 10 நிமிடங்கள் கழித்து திரும்பி வந்து பார்த்த போது, இருசக்கர வாகனத்தில் பெட்டி உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அருகில் சென்று பார்க்கையில், அதில் வைக்கப்பட்டு இருந்த 1.32 லட்சம் ரொக்கம் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர். சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது, இளைஞர் ஒருவர் நர்மதாவை வங்கியில் இருந்து பின்தொடர்ந்து வந்து, சரியான நேரத்தில் இருசக்கர வாகனத்தின் பெட்டியை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில், பணத்தை திருடி சென்ற நபர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ? என பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
பொன்னை பேருந்து நிலையம் அருகே பட்டப் பகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வங்கியில் இருந்து பணத்தை எடுத்தால் வழியில் வேறு எங்கும் நிற்காமல் நேராக வீட்டுக்கு செல்லுமாறு காவல்துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. குறிப்பாக, காரிலோ அல்லது பைக்கிலோ பணத்தை வைக்க வேண்டாம் என போலீசார் கூறி வருகின்றனர். மேலும், வங்கியில் இருந்து பணத்தை எடுத்து செல்லும் போது வழியில் கவனத்தை திசைதிருப்பி பணம் திருடப்படலாம் என்றும் போலீசார் எச்சரிக்கின்றனர்.

0 கருத்துகள்: