திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற இஸ்லாமியர்கள்: தடுத்து நிறுத்திய போலீசார் !!!
திருப்பரங்குன்றம் மலையில் அமைந்து உள்ள சிக்கந்தர் தர்காவில் ரமலான் தொழுகைக்கு சென்ற இஸ்லாமியர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பெயர் உள்ளிட்ட விவரங்களை கேட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ரமலான் பண்டிகையை முன்னிட்டு, இன்று அதிகாலை முதலே ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்காக திருப்பரங்குன்றம் மலை மீது ஏற முயன்றனர். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
மலைக்கு செல்லும் ஒவ்வொருவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்த பிறகே அனுமதிக்க முடியும் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
காவல் துறையினரின் இந்த நடவடிக்கைக்கு இஸ்லாமிய அமைப்பினரும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆண்டுதோறும் அமைதியான முறையில் தொழுகை நடத்தி வருகிறோம். ரமலான் நாளான இன்று, எங்களை தடுத்து நிறுத்தி ஒருவர் பின் ஒருவராக அனுப்புவது சரியில்லை’ என அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பண்டிகை காலத்தில் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிப்பது மத நல்லிணக்கத்திற்கு ஆபத்தானது என்றும், இது தங்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும் அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள முருகன் கோயில் தீபத்தூணுக்கு அருகில் தான் சிக்கந்தர் பாதுஷா தர்கா அமைந்து உள்ளது. இதன் இடையே, இந்த தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக தற்போது சிக்கல் நீடித்து வருகிறது. இதன் இடையே, திருப்பரங்குன்றம் மலை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம் என்பதால், சிக்கந்தர் பாதுஷா தர்கா பகுதியில் விலங்கு பலி கொடுப்பதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த உத்தரவை பிப்ரவரி 2026-இல் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
மேலும், தர்காவில் முஸ்லிம் மதத்தினர் தினமும் தொழுகை நடத்த உரிமையில்லை என்றும், ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகை நாட்களில் மட்டுமே அங்கு தொழுகை நடத்த அனுமதி என்றும் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இது இரு மதத்தினர் இடையிலான பிரச்சினை என்பதால், தற்போது திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்தில் பாதுகாப்புக்காக அதிக அளவில் காவல் துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த சூழலில், இன்று ரமலான் திருநாளை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல முயன்ற இஸ்லாமியர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விவரங்களை கேட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பரங்குன்றம் காவல் துறை உதவி ஆணையர் சசி பிரியா விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது அவர், “மலை மீது செல்லும் அனைவரிடமும் விவரங்களை கேட்ட பிறகு தான் அனுப்ப முடியும். இது புதிய நடவடிக்கை அல்ல. எனவே மக்கள் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
ஆனால், ரம்லான் திருநாளான இன்றும், எங்களிடம் இப்படி தகவல்களை சேகரிப்பது சரியல்ல என இஸ்லாமியர்கள் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக திருப்பரங்குன்றம் மலை அடிவாரம் பரபரப்பாக காணப்பட்டது.

0 கருத்துகள்: