சனி, 21 மார்ச், 2026

கூடலூர் ஊசிமலையில் 150 அடி பள்ளத்தில் விழுந்த சுற்றுலா பயணி: 13 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு !!!

SHARE

 கூடலூர் ஊசிமலையில் 150 அடி பள்ளத்தில் விழுந்த சுற்றுலா பயணி: 13 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு !!!

கூடலூர் அருகே ஊசிமலை காட்சிமுனை சுற்றுலா தளத்தில் நேற்று செல்ஃபி எடுக்கும்போடு தவறி 150 அடி பள்ளத்தில் விழுந்த சுற்றுலா பயணியை 13 மணி நேரத்திற்கு பின்பு தீயணைப்புத் துறை மற்றும் ராணுவத்தினர் இணைந்து அதிகாலை 3 மணி அளவில் உயிருடன் மீட்டனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து உதகை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் ஊசிமலை காட்சிமுனை சூழல் சுற்றுலா மையம் இயங்கி வருகிறது. இங்கு செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த சிவகுருநாதன் என்பவர் நேற்று சுற்றுலா வந்திருந்தார். அப்போது, அங்கு இருந்து செல்ஃபி எடுக்கும் போது 150 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார்.

பள்ளத்தில் விழுந்த சிவகுருநாதன், உடனடியாக தன்னை அழைத்து வாடகை கார் ஓட்டுநரை செல்போனில் தொடர்ப்பு கொண்டு, தான் மலையில் இருந்து தவறி கீழே விழுந்ததை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, அந்த கார் ஓட்டுநர் போலீசாருக்கும், வனத் துறையினருக்கும் தகவல் அளித்தார். இதை அடுத்து, அங்கு போலீசாருடன் வந்த தீயணைப்புப் படையினர், அவரை மீட்க முயன்றனர். ஆனால், இரவு நேரம் என்பதாலும் யானை, புலி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ள அடர்ந்த வனப்பகுதி என்பதாலும் சிவகுருநாதனை தீயணைப்புப் படை வீரர்களால் நெருங்க முடியவில்லை. பின்னர், மலை பள்ளத் தாக்கில் சிக்கி இருந்த அவரைக் கண்டறிந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர், போர்வை உள்ளிட்டவற்றை வழங்கி நெருப்பு மூட்டி அவரின் அருகில் சென்று அவரை பாதுகாத்தனர்.

கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த அவரை, மேலும் காயமின்றி மீட்பது சவாலானதாக இருந்தது. இந்நிலையில், வெலிங்டன் ராணுவ அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசியதன் அடிப்படையில் வனத்துறையினருடன் இணைந்து ராணுவ வீரர்கள் மீட்புப் பணியை தொடங்கினர். அப்பகுதி செங்குத்தான பகுதி என்பதால் அவரை கயிறு கட்டி மேலே தூக்குவது சாத்தியமில்லாமல் இருந்தது. கரடுமுரடான நிலப்பரப்பு, மங்களான சூழ்நிலை நிலவிய நிலையில், அவரைக் காப்பாற்ற 70 மீட்டர் நீளமுள்ள கம்பிவடம் பயன்படுத்தப்பட்டது.

விடிய, விடிய நடைபெற்ற இந்த மீட்பு பணியில் ராணுவம், வனத்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறையினர் ஈடுபட்ட நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் 150 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞரை உயிருடன் மீட்டனர். சுமார் 13 மணி நேரம் இந்த மீட்பு போராட்டம் நடைபெற்றது. பின்னர், அவரை உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராணுவத்தினர் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 13 மணி நேரம் இடைவிடாமல் போராடி, இளைஞரை உயிருடன் மீட்ட வனத்துறை, தீயணைப்பு துறை மற்றும் ராணுவ வீரர்களை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த மீட்புப் பணியின் போது நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தன்னீரு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் எங்கும் செல்லாம் அங்கேயே இருந்து மீட்புப் பணியை கண்காணித்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தன்னீரு கூறுகையில், 

"பள்ளத்தில் விழுந்தவர் இராணுவத்தினர் உதவியுடன் மீட்கப்பட்டார். காயங்கள் ஏற்பட்ட நிலையில் உயிருக்கு எந்த பாதிப்பும் இல்லை. உடனடியாக உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தற்போது நலமுடன் இருக்கிறார்" எனத் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: