சனி, 21 மார்ச், 2026

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட நபருக்கு திடீர் உடல்நலக் குறைவு !!!

SHARE

 விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட நபருக்கு திடீர் உடல்நலக் குறைவு !!!

12 ஆம் வகுப்பு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தர்ம முனீஸ்வரனுக்கு நள்ளிரவில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவர் சிகிச்சைக்காக எட்டயபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தில் மார்ச் 10 ஆம் தேதி காணாமல் போன 12ஆம் வகுப்பு மாணவி, அடுத்த நாள் மதியம் 2 மணி அளவில் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். விசாரணையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொடூர செயலில் ஈடுபட்ட நபரை கைது செய்யும் வரை, மாணவியின் சடலத்தை வாங்க மாட்டோம் எனக் கூறி, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் இடையே, குற்றவாளிகளை பிடிக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை முடுக்கி விடப்பட்டது. பலரிடம் விசாரணை நடத்தியும் 9 நாட்களாக குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறிவந்த நிலையில், சந்தேகத்திற்குரிய 5 பேரின் டின்.என்.ஏ மாதிரிகளை பெற்று அதனை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், வேடநத்தம் கிராம காட்டுப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு காற்றாலையின் சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்ததில், சம்பவத்தன்று அங்கு ஒரு பைக் சென்றதை போலீசார் பார்த்தனர். இதனைத் தொடர்ந்து, அந்த பைக் குறித்து விசாரித்த போது, அது ராமநாதபுரத்தில் இருந்து திருடப்பட்டது தெரியவந்தது.

அதுகுறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், அங்கு பைக்கில் வந்து சென்ற சாயல்குடியைச் சேர்ந்த மாவீரன் (எ) தர்ம முனீஸ்வரன் (30) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது, கடந்த 2020 ஆம் ஆண்டு 65 வயது மூதாட்டி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து நகையை திருடிய வழக்கில் இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்தது. அவர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.

இந்த சூழலில், மாணவி இறப்பு சம்பவம் நடந்த நேரத்தில் முனீஸ்வரனின் செல்போன் சிக்னல் அங்கு காட்டியதையும் போலீசார் கண்டு அறிந்தனர். இதை அடுத்து, அவரை குளத்தூர் காவல் நிலையத்தில் ஆஜர்படுத்தி, அங்கு இருந்து 3 வாகனங்களில் சுமார் 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் காவல் துறை கண்காணிப்பாளர் ஒருவர் தலைமையில், ராஜபாண்டி நகரில் முனீஸ்வரன் வசித்து வந்த வீட்டிற்கே அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் மீண்டும் காவல் துறை வாகனத்தில் ஏற்றி தூத்துக்குடி - மதுரை பைபாஸ் சாலை வழியாக காவல் துறை வாகனத்தில் கொண்டு சென்றனர். அந்த வாகனத்திற்கு முன்னும் பின்னும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் அதே பகுதியில் சுற்றி சுற்றி வந்து வாகனத்தில் வைத்தே விசாரணை நடத்தினர்.


இதனால் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற சந்தேகம் எழுந்தன. இந்நிலையில், ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது நள்ளிரவில் முனீஸ்வரனுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதாகவும், அவரை எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: