தமிழ்நாட்டில் ரூ.151 கோடி மதிப்பிலான பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் - அர்ச்சனா பட்நாயக் தகவல் !!!
சட்டப் பேரவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு தமிழ்நாடு முழுவதும் 151 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்து உள்ளார்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனால் மாவட்ட அளவில் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகின்றன. அதன்படி, வாக்காளர்களுக்கு பணம் அல்லது பரிசுப் பொருள் விநியோகம் செய்யப்படுவதை தடுக்கும் வகையில், ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் தொகையை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
தற்போது 234 தொகுதிகளிலும், தலா 9 பறக்கும் படைகள், 9 நிலை கண்காணிப்பு குழுக்கள் என்ற விகிதத்தில், தமிழ்நாடு முழுக்க 2,160 பறக்கும் படைகள், 2,160 நிலை கண்காணிப்பு குழுக்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
தேர்தல் செலவின கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் அமலாக்க முகமைகள், சட்ட விரோதப் பணப் புழக்கம், வாக்காளர்களை கவர வழங்கப்படும் இலவசப் பொருட்கள் மற்றும் பிற தடை செய்யப்பட்ட பொருட்களின் விநியோகத்தைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகளைத் தீவிரப்படுத்தி உள்ளன.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்,
சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு தமிழ்நாடு முழுவதும் 151 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், சி-விஜில் செயலி மூலம் இதுவரை 794 புகார்கள் பெறப்பட்டு உள்ள நிலையில், அதில் 20 புகார்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், மீதமுள்ள அனைத்து புகார்கள் மீதும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
புதிதாக விண்ணப்பித்தவர்களில் 50 சதவீத பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை தபால் மூலம் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறிய அவர், மீதம் உள்ளவர்களுக்கு தேர்தல் வாக்குப் பதிவிற்குள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளை கணக்கிடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறிய அவர், தேர்தலில் வாக்குப்பதிவு சதவிதத்தை அதிகப்படுத்துவதற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

0 கருத்துகள்: