அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு !!!
அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க, அ.ம.மு.க ஆகிய கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகி உள்ளது.
தமிழ்நாட்டில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க தனது கூட்டணி கட்சிகளுடன் கடந்த சில வாரங்களாக தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையை நடத்தி வந்தது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சில முறை டெல்லி சென்றும் கூட்டணி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்களிடம் ஆலோசனை நடத்தி இருந்தார்.
இந்நிலையில், அ.தி.மு.க கூட்டணியில் முக்கிய கட்சிகளான பா.ஜ.க, பா.ம.க, அ.ம.மு.க ஆகிய கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று நிறைவடைந்ததை அடுத்து, அக்கட்சிகளுக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, பா.ஜ.க வுக்கு 27 , பா.ம.க 18, அ.ம.மு.க வுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 56 இடங்களை அ.தி.மு.க ஒதுக்கி உள்ளது.
கடந்த முறை அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க 20 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 27 ஆக உயர்ந்து உள்ளது. அதேவேளை கடந்த முறை அ.தி.மு.க கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க இந்த முறை 18 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட உள்ளது. இந்த கூட்டணியில் புதிதாக இணைந்து உள்ள அ.ம.மு.க வுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன
அ.தி.மு.க தலைமையகத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் உடன்படிக்கை கையெழுத்தானது. இதில் பா.ஜ.க சார்பில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
அ.தி.மு.க கூட்டணியில் உள்ள மேலும் சில கட்சிகளுக்கு இன்று இரவு அல்லது நாளைக்குள் தொகுதிகள் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு இடையே, அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்று உள்ள அ.ம.மு.க, 11 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்து உள்ளார்.
அ.தி.மு.க கூட்டணியில் 60 முதல் 65 தொகுதிகள் வரை கூட்டணிக்கு ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதால், அ.தி.மு.க 170 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

0 கருத்துகள்: