2026 தேர்தல்: தி.மு.க. கூட்டணியில் ம.ஜ.க, எஸ்.டி.பி.ஐ, முக்குலத்தோர் புலிப் படை கட்சிக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு !!!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மனிதநேய ஜனநாயக கட்சி (ம.ஜ.க), எஸ்.டி.பி.ஐ (SDPI) மற்றும் முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மனிதநேய ஜனநாயக கட்சி (ம.ஜ.க)
தி.மு.க கூட்டணியில் இணைந்து உள்ள ம.ஜ.க-வுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இது குறித்து அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தி.மு.க கூட்டணியில் எங்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. நாகப்பட்டினம் உள்ளிட்ட 5 தொகுதிகள் விருப்பப் பட்டியலாகக் கொடுத்து உள்ளோம். நாளை மீண்டும் முதலமைச்சரைச் சந்திக்க உள்ளோம், அப்போது எந்தத் தொகுதி என்பது உறுதி ஆகும். 234 தொகுதிகளுமே எங்கள் தொகுதிகள் தான். இந்த சந்திப்பு மிகுந்த மனநிறைவைத் தருகிறது என்றார். கடந்த 2016 தேர்தலில் அ.தி.முக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு நாகை தொகுதியில் தமிமுன் அன்சாரி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
முக்குலத்தோர் புலிப்படை
நடிகர் கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை கட்சிக்கும் 1 தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இக்கட்சியும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து கருணாஸ் பேசுகையில்,
நான் விருப்பப்பட்டு தான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறேன். அ.தி.மு.க கூட்டணியில் தான் கூட்டணிக் கட்சிகளை இரட்டை இலையில் நிற்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். ஜி.கே. வாசன் ஏன் தாமரை சின்னத்தில் நிற்கிறார் ? ஆனால், தி.மு.க கூட்டணியில் என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என்று குறிப்பிட்டார்.

0 கருத்துகள்: