சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.23 லட்ச பணம், நகை பறிமுதல் : வருமான வரி அலுவலகத்தில் ஒப்படைப்பு - ரயில்வே காவல்துறையினர் !!!
எக்ஸ்பிரஸ் ரயிலில் முறையான ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.23 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து உள்ளன. எனவே, பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்து மேல் பணத்தோ, அதற்கு அதிகமான மதிப்புடைய நகையையோ எடுத்துச் சென்றால் அதற்குரிய ஆவணங்களை வைத்து இருக்க வேண்டும். இல்லையெனில் அந்த பணம் பறிமுதல் செய்யப்படும்.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கழுகு பார்வை வைத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், நேற்று வரை மட்டும் ரூ.75 கோடியே 3 லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் 2,160 பறக்கும் படைகள், 2,160 நிலை கண்காணிப்புக் குழுக்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் யாரேனும் பணம் எடுத்து வருகிறார்களா ? என ரயில்வே பாதுகாப்புப் படை போலீசாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, பொதுப் பெட்டியில் வந்த சென்னையை சேர்ந்த தணிகைவேல் என்பவர் ரூ.4 லட்சத்து 98 ஆயிரத்து 400 பணம் மற்றும் ரூ.13 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள 94 கிராம் நகை எடுத்து வந்தது தெரியவந்தது.
அந்த பணம் மற்றும் நகையின் விவரம் குறித்து அவரிடம் கேட்ட போது, உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்தது. அதனால், ரூ.18 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகையை பறிமுதல் செய்த போலீசார், அதனை வருமான வரி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
அதேபோல, மும்பையில் இருந்து சென்னை வந்த மும்பை - சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த சென்னையை சேர்ந்த நந்தகுமார் என்பவர், முறையான ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.5 லட்சத்து 9 ஆயிரத்து 170 பணத்தை பறிமுதல் செய்த பெரம்பூர் ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார், அதனை வருமான வரி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

0 கருத்துகள்: