அரசு ஊழியரின் 3 வது பிரசவத்திற்கும் சம்பளத்துடன் கூடிய ஓராண்டு மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலுார் அரசு பள்ளியில் 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் சுமைதா ரஹமத். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியில் சேருவதற்கு முன்பு 2 குழந்தைகள் பிறந்து உள்ளது. தற்போது 3 வது முறையாக கர்ப்பமாகி உள்ளதால், ஏப்ரல் 15 ஆம் தேதி குழந்தை பிறக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
அதனால், 2021 ஆம் ஆண்டு அரசாணையின் படி, 2026 ஏப்ரல் மாதம் முதல் 2027 ஏப்ரல் வரை விடுமுறை வழங்க வேண்டும் என கல்வி அதிகாரிக்கு மனு அளித்து உள்ளார். ஆனால், ஏற்கனவே 2 குழந்தைகள் பிறந்து உள்ளதால், 3 வது குழந்தைக்கு விடுமுறை வழங்க முடியாது என கோரிக்கையை கல்வி அதிகாரி நிராகரித்து உள்ளார். கல்வி அதிகாரியின் இந்த உத்தரவை ரத்து செய்து 3 வது பிரசவத்திற்கு ஓராண்டு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை அளிக்க வேண்டும் என சுமைதா ரஹமத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.டி ஆஷா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில், 2025 ஆம் ஆண்டு 3 வது குழந்தை பெற மகப்பேறு விடுமுறை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2 குழந்தைகள் வரை மகப்பேறு விடுமுறை வழங்க அரசாணை உள்ளது. அதனால், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
இதை அடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, உச்ச நீதிமன்ற தீர்ப்பை கருத்தில் கொண்டு உயர் நீதிமன்றமும் 3 வது குழந்தை பெற மகப்பேறு விடுமுறை வழங்குகிறது என உத்தரவிட்டு உள்ளது.
இதனைத் தொடர்ந்து, வட்டார கல்வி அதிகாரியின் உத்தரவை ரத்து செய்த நீதிபதி, மனுதாரருக்கு சம்பளத்துடன் கூடிய ஓராண்டு விடுமுறை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு தீர்ப்பு அளித்தார்.

0 கருத்துகள்: