சனி, 28 மார்ச், 2026

50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் செந்தில் பாலாஜியை தோற்கடிப்பேன் - அம்மன் அர்ஜூனன் !!!

SHARE

 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் செந்தில் பாலாஜியை தோற்கடிப்பேன் - அம்மன் அர்ஜூனன் !!!

கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என அ.தி.மு.க வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் கூறி உள்ளார்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணம் சுந்தரமும், கோயம்புத்தூர் வடக்கு தொகுதியில் செந்தமிழ் செல்வன், கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி, சூலூர் தொகுதியில் தளபதி முருகேசன், தொண்டாமுத்தூர் தொகுதியில் என்.ஆர்.கார்த்திகேயன், கிணத்துக்கடவு தொகுதியில் சபரி கார்த்திகேயன், வால்பாறை தொகுதியில் சுதாகரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க வின் கோட்டை என கருதப்படும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் தி.மு.க வை அதிக தொகுதிகளில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த முறை கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி களம் இறக்கப்பட்டு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்நிலையில், கோவை தெற்கில் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் இது தொடர்பாக பேசும்போது,

 ”தி.மு.க, அ.தி.மு.க விற்கு போட்டியில் வெற்றி பெறுவது அ.தி.மு.க தான். 2026 மே மாதம் 5-ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்பார்” என்றார்.

செந்தில் பாலாஜி கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, ”செந்தில் பாலாஜி எங்கள் வேட்பாளர் விஜயபாஸ்கரை கண்டு பயந்து இங்கே வந்து விட்டார். கரூரில் அ.தி.மு.க வேட்பாளர் விஜயபாஸ்கர் என்று அறிவிக்கப்பட்டதும் செந்தில் பாலாஜிக்கு காய்ச்சல் வந்து விட்டது. இது சிறிய தொகுதி என்பதால் மக்களை ஏமாளிகள் என்று நினைத்து டப்பா, பாக்ஸ் போன்று ஏதாவது கொடுத்து விடலாம் என்று நினைத்து விட்டனர். ஆனால் கொங்கு மக்களுக்கு வரவேற்கவும் தெரியும், அடித்து விரட்டவும் தெரியும்.

நிச்சயமாக 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் நான் வெற்றி பெறுவேன். இங்கு அவருக்கு இடமில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் உலக நாயகன் போட்டியிட்டார் அவரால் வெல்ல முடிந்ததா ? இல்லை தானே. இங்கு உள்ள மக்கள் யோசித்து அவர்களுக்கான மக்கள் பணியை செய்யும் நபர்களை தான் தேர்ந்தெடுப்பார்கள். ஓட்டு வாங்கி விட்டு சென்னைக்கு செல்பவர்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். 2016 ஆம் ஆண்டு இதே தெற்கு தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் 17 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி பலமும் உள்ளது. அதேபோன்று இந்த முறையும் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்” என்றார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: