ஈரானை தாக்க மாட்டோம் : போர் நிறுத்தத்தை மேலும் 10 நாட்கள் நீட்டித்த டிரம்ப் !!!
ஈரான் மீதான தாக்குதலை மேலும் 10 நாள்கள் நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஹார்முஸ் நீரிணையை ஈரான் முடக்கி, சர்வதேச பொருளாதாரத்தில் மிகப்பெரிய மந்த நிலையை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, ஈரான் மீது 5 நாள்கள் தாக்குதல் நடத்தப்போவதில்லை என டிரம்ப் முன்பு அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், அதை மேலும் 10 நாள்கள் நீட்டித்து, ஈரான் மீது எந்தவொரு தாக்குதல் நடவடிக்கையையும் அமெரிக்கா மேற்கொள்ளாது என உறுதி அளித்து உள்ளார். போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருப்பதால், ஏப்ரல் 6 ஆம் தேதி வரை தாக்குதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார்.
ஹார்முஸ் நீரிணையை அனைத்து நாடுகளும் அணுக ஈரான் ஒத்துழைக்க வேண்டும் என்றும், அதற்கு 2 நாள்கள் மட்டுமே அவர்களுக்கு அவகாசம் உள்ளது எனவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) அமெரிக்க அதிபர் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த சூழலில், போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடந்து வருவதால், ஈரான் மீது சில தினங்களுக்கு தாக்குதல் நடத்தபோவதில்லை என டிரம்ப்பின் திடீர் பின்வாங்கல் நடவடிக்கை உலக நாடுகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஈரான் தங்களிடம் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு கெஞ்சி வருவதாகவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து உள்ளார்.
ஆனால், இவை அனைத்தையும் முற்றிலுமாக மறுத்து இருக்கும் ஈரான், தாங்கள் அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தைக்கும் தயாராக இல்லை என கறாராக மறுத்து வருகிறது. மேலும், இந்தியா, சீனா போன்ற தங்களின் நட்பு நாடு கப்பல்களுக்கு மட்டுமே ‘ஹார்முஸ் நீரிணை’ திறந்து இருக்கும் என்றும் தெரிவித்து உள்ளது.
இதற்கு இடையில், ஈரானின் உச்சத் தலைவராக தான் வர வேண்டும் என அந்நாட்டு மக்கள் விரும்பியதாகவும், அதனை ஏற்க தனக்கு மனமில்லை என்றும் நேற்றைய தினத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் பகிரங்கமாக பேசினார். இதற்கு ஈரானிய தலைவர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
சுமார் 28 நாள்களாக நடந்து வரும் ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் படைகளின் தாக்குதலில், குறைந்தது 1,900 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக ஈரானின் துணை சுகாதார அமைச்சர் அலி ஜஃபாரியன் அல் ஜசீரா ஊடகத்திடம் தெரிவித்து உள்ளார்.
மேலும், ஈரானுக்கு ஆதரவாக செயல்படும் லெபனானின் ஹெஸ்புல்லா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 1,100 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். சர்வதேச அளவில் பரபரப்பான காணப்படும் இந்த சூழலை சமாளிக்க ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: