வியாழன், 19 மார்ச், 2026

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை : தண்ணீர் விற்பனைக்கு தடை, பெண் காவலர்களுக்கு 6 மணி நேர வேலை வெளியானது ...

SHARE

 நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை : தண்ணீர் விற்பனைக்கு தடை, பெண் காவலர்களுக்கு 6 மணி நேர வேலை வெளியானது ...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டு உள்ளார். பல்வேறு திட்டங்கள் அடங்கிய தேர்தல் வாக்குறுதிகள் புத்தகமாக வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிப்போட்டி என அறிவித்து 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கனவே அறிவித்து இருந்தார். தமிழ்நாட்டில் வேட்பாளர்களை அறிவித்த முதல் கட்சியாக நாம் தமிழர் கட்சி உள்ளது. அக்கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, சென்னை கிண்டி அண்ணா சாலையில் அமைந்து உள்ள பிரபல தனியார் ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டு உள்ளார்.

எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே, நாம் தமிழர் ஆட்சி, செயற்பாட்டு வரைவு 2026" என்ற தலைப்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. மொத்தம் 492 பக்கங்கள் கொண்ட நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கை புத்தகங்களில் 49 தலைப்புகளில் பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்று உள்ளன.

நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள்:

நீர்நிலைகளின் கரைகளில் மண் அரிப்பைத் தடுக்கவும், கரையை வலிமைப்படுத்தவும் ஆல், அரசு, பனை, புங்கை, பூவரசு, மூங்கில், வேம்பு, புளி போன்ற மரங்கள் நடப்படும்.

கரிகாலச்சோழன், இராசராசச்சோழன், அரசேந்திரச்சோழன், பராந்தகச்சோழன், ஆதித்த கரிகாலசோழன், குந்தவை நாச்சியார், இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் போன்றவர்களின் பெயரில் 500 முதல் 1,000 குறுக்கப் பரப்பளவில் புதிய ஏரிகள், கண்மாய்கள் உருவாக்கப்படும்.

தண்ணீர் வணிகத்திற்குத் தடை விதிக்கப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் அரசே இலவச தூய குடிநீர் கொடுக்கும். அதற்கான புதிய கட்டமைப்புகளை உருவாக்கும். இது பல்லாயிரக் கணக்கான புதிய வேலை வாய்ப்பைக் கொடுக்கும் துறையாக மாற்றப்படும்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகங்களில் இயற்கைவழி மரபு வேளாண் ஆய்வுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதில் ஈடுபடும் தன்னார்வலர்களின் செயல்பாட்டிற்கு நாம் தமிழர் அரசு ஆதரவு அளிக்கும்.

நிர்வாகத் தலைநகரமாக திருச்சியும், தொழில்நுட்பத் தலைநகரமாக சென்னையும், தொழில் மற்றும் வணிகத் தலைநகரமாக கோவையும், மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகரமாக மதுரையும், தமிழர் மெய்யியல் தலைநகரமாக கன்னியாகுமரியும் என மொத்தம் ஐந்து தலைநகரங்கள் உருவாக்கப்படும்.

காவிரி, வைகை, தாமிரபரணி, தென்பெண்ணை, பாலாறு உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து ஆறுகளிலும் 15 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டிப் புதிய வேளாண் மண்டலங்கள் உருவாக்கப்படும்.

தமிழ்நாட்டின் மக்கள் தொகைக்கு ஏற்ப பல் மருத்துவர்களை உருவாக்க வேண்டி புதிய பல் மருத்துவக் கல்லூரிகள் மாவட்டந்தோறும் தொடங்கப்படும்.

ஒவ்வொரு ஊராட்சியிலும் தரம் வாய்ந்த விளையாட்டுப் பயிற்சித் திடல்கள், பயிற்சியாளர்கள், ஊராட்சி அளவிலேயே அமர்த்தப்படுவார்கள்.

தமிழ்நாட்டு மீன்வர்களைப் பாதுகாப்பதற்காக தனியே ஒரு சிறப்புக் கடலோரக் காவல்படை, 'நெய்தல் படை' என்ற பெயரில் உருவாக்கப்படும்.

பெண் காவலர்களுக்கு 6 மணி நேர வேலை; ஆண் காவலர்களுக்கு 8 மணி நேர வேலை திட்டம் உருவாக்கப்படும்.

காடு வளம் பெற்று இருந்தால் தான் நாடு வளம் பெற்று இருக்கும். எனவே காடுகளைப் பாதுகாக்கச் சிறப்புத் திட்டங்களும், புதிய சட்டங்களும் கொண்டு வரப்படும்.

முதலமைச்சர் தொடங்கி கடைநிலை அரசு ஊழியர்கள் வரை அனைவரின் குழந்தைகளும் உறுதியாக அரசுப் பள்ளிகளில் தான் படிக்க ஆவன செய்யப்படும்

மூன்று சட்டமன்றத்திற்கு ஒரு பாராளுமன்றம், பெண்களுக்கென்று தனித் தொகுதிகள் உருவாக்கப்படும்.

மருத்துவக் கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்படும், திருநங்கைகள், திருநங்கைகளுக்கு தனி மருத்துவமனை, நோயாளிகளின் உறவினர்களுக்கு தனி மருத்துவ விடுதி ஏற்படுத்தப்படும் என்பன உள்ளிட்ட பவ்வேறு வாக்குறுதிகள் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்று உள்ளன.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: