சேலத்தில் அரசுப் பேருந்து கோர விபத்து - 8 பேர் உயிரிழப்பு !!!
கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து சரக்கு வாகனம் மீது மோதிய விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கோவை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று நேற்று பிற்பகல் (மார்ச் 20) சேலம் நோக்கிச் சென்றுக் கொண்டு இருந்தது. பெங்களூரு-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உத்தமசோழபுரம் என்ற இடத்தை பேருந்து கடந்து செல்லும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பை உடைத்துக் கொண்டு எதிர்புறம் சாலையை நோக்கி பாய்ந்தது. அப்போது எதிர்புற சாலையில் வந்த டெம்போ வாகனத்தின் மீது பேருந்து பலமாக மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கர்ப்பிணி பெண் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டெம்போவில் பயணித்த செல்வராஜ், முருகன், அமுதா, நித்திஷ்கா, ஜீவிகா மற்றும் கர்ப்பிணி சத்யா ஆகியோரும், இருசக்கர வாகனத்தில் பயணித்த இருசாயி, மணிகண்டன் ஆகிய இருவரும் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை முடுக்கி விட்டனர். பேருந்தில் காயம் அடைந்த பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். எனினும், பேருந்தில் பயணித்தவர்களில் எத்தனை பேருக்கு காயம் அடைந்தனர், ஓட்டுநர் மற்றும் நடத்துநரின் நிலை குறித்து தகவல் இதுவரை அதிகாரப் பூர்வமாக வெளியாகவில்லை. மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதன் இடையே, விபத்து குறித்த சி.சி.டி.வி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில், "சேலம் - உத்தமசோழபுரம் பகுதியில், கோயம்புத்தூரில் இருந்து சேலம் நோக்கி வந்த தமிழ்நாடு அரசுப் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோர தடுப்பை உடைத்து எதிர்புறம் சென்ற வாகனங்கள் மீது அதிவேகமாக மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர் என்ற செய்திகள் வருகின்றன, வருத்தத்திற்குரிய இத்தகவல் அறிந்து மிகுந்த துயருற்றேன்.
தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள் விபத்துக்கு உள்ளாவது தொடர்கதையாகி உள்ள நிலையில், இந்த ஆட்சியில் அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதையே இந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம்பெற்று இல்லம் திரும்ப இறைவனை வேண்டுகிறேன்" என்று குறிப்பிட்டு உள்ளார். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

0 கருத்துகள்: