திங்கள், 16 மார்ச், 2026

கேரள தேர்தல் களம் : ஆளும் சிபிஐ(எம்) 86 இடங்களில் போட்டி !!!

SHARE

 கேரள தேர்தல் களம் : ஆளும் சிபிஐ(எம்) 86 இடங்களில் போட்டி !!!

கேரளத்தில் வரும் ஏப்ரல் 9-இல் சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

 கேரளத்துடன் சேர்த்து அஸ்ஸாம், புதுச்சேரியில் ஏப். 9-இல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 - ல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப்ரல் 23, 29-இல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையும் அதன் தொடர்ச்சியாக தேர்தல் முடிவுகளும் மே 4-இல் வெளியாகின்றன.

இந்நிலையில், கேரளத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஆளும் சிபிஐ(எம்) 86 இடங்களில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டு இப்போது சட்டப் பேரவை உறுப்பினர்களாக பதவியில் உள்ளவர்களில் 56 பேருக்கு மீண்டும் இம்முறையும் பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பினராயி விஜயன் தான் ஏற்கெனவே உறுப்பினராகி உள்ள கண்ணூர் மாவட்டம், தர்மடம் தொகுதியில் மீண்டும் அக்கட்சி வேட்பாளராகக் களமிறங்குகிறார். அக்கட்சி மூத்த தலைவரும் அம்மாநில முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான கே. கே. சைலஜா கண்ணூரின் பேராவூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

வேட்பாளர் தேர்வு முழுக்க முழுக்க ஜனநாயக முறையில் நடத்தப்படும் என்றும் திருவனந்தபுரத்தில் இன்று (மார்ச் 15) செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலச் செயலர் எம்.வி. கோவிந்தன் தெரிவித்தார்.

மொத்தம் 140 சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய கேரளத்தில், 71 இடங்களைக் கைப்பற்றும் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்க தகுதி பெறும். இந்நிலையில், அங்கு ஆளுங்கட்சியாக உள்ள சிபிஐ(எம்) தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்.), தொடர்ச்சியாக 3-ஆவது முறையாக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்குமா என்பது மே 4-ல் தெரிய வரும்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: