செவ்வாய், 24 மார்ச், 2026

புதுச்சேரி சட்டமன்றத் ஏப்ரல் 9 -ம் தேதி பொதுத் தேர்தல் : 500-க்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் !!!

SHARE

 புதுச்சேரி சட்டமன்றத் ஏப்ரல் 9 -ம் தேதி பொதுத் தேர்தல் : 500-க்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் !!!

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மொத்தம் 515 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் (மார்ச் 23) நிறைவு அடைந்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள். சுயேட்சைகள் என மொத்தம் 515 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்துக்கு ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பின், வேட்பு மனு தாக்கல் செய்ய ஒரு வார காலமே தேர்தல் ஆணையம் அவகாசம் அளித்து இருந்தது. இதனால் பா.ஜ.க, காங்கிரஸ், அ.தி.மு.க ,தி.மு.க, என்.ஆர்,காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் தங்களின் கூட்டணிக் கணக்குகளை விரைவாக முடிக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டது.

ஆனால், என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க, காங்கிரஸ் -தி.மு.க கூட்டணிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீட்டில் நாள் கணக்கில் இழுபறி நீடித்து வந்தது. பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, மார்ச் 20 தேதி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி என்.ஆர்.காங்கிரஸ் -16, பா.ஜ.க -10, அ.தி.மு.க மற்றும் லட்சிய ஜனநாயக கட்சி தலா இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது.

அதேசமயம், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நேற்று காலை வரையிலும் கூட, தி.மு.க - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாத நிலை நீடித்தது. ஒரு வழியாக பிற்பகலில் உடன்படிக்கை ஏற்பட்டது. இதன்படி, காங்கிரஸ் -16, தி.மு.க -12, இ.கம்யூ, வி.சி.க தலா -1 தொகுதிகளில் போட்டியிட உள்ளன.

விஜயின் த.வெ.க 28 இடங்களில் களமிறங்க உள்ள நிலையில், இரண்டு தொகுதிகள் நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.


வழக்கம் போல் தனித்து களம் காணும் சீமானின் நாம் தமிழர் கட்சி புதுச்சேரியில் 28 இடங்களில் போட்டியிடுகிறது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: