செவ்வாய், 24 மார்ச், 2026

வாக்கு சேகரிக்க வருபவர்களை கட்டி வைப்போம்' : தேர்தல் நாளில் தங்களது வாக்காளர் அட்டையை அரசிடம் ஒப்படைக்கபடும் - கிராமத்தினர் வெளியிட்ட அறிவிப்பால் பரபரப்பு !!!

SHARE

 வாக்கு சேகரிக்க வருபவர்களை கட்டி வைப்போம்' : தேர்தல் நாளில் தங்களது வாக்காளர் அட்டையை அரசிடம் ஒப்படைக்கபடும் - கிராமத்தினர் வெளியிட்ட அறிவிப்பால் பரபரப்பு !!!

பல ஆண்டுகளாக சாலை வசதி அமைத்து தராத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து தேர்தலை புறக்கணிக்க உள்ள கிராமத்தினர், வாக்கு சேகரிக்க வருபவர்களை கட்டி வைக்க போவதாக அறிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் தான் புதுவாடி. இந்த ஊராட்சியில் உள்ள மருத்துவர் காலனிக்கு சுதந்திரம் கிடைத்த நாளில் இருந்து 79 ஆண்டுகளாக சாலை வசதியை அமைத்து தரவில்லை என அப்பகுதி மக்களின் ஏக்கமாக இருந்து வருகிறது.

தங்கள் பகுதியில் சாலை வசதியை ஏற்படுத்திக் கொடுங்கள் என அப்பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக அதற்காக போராடி வருகின்றனர். 

இருப்பினும், அரசு தங்களது பகுதியினை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், கிராம ஊராட்சி அலுவலகம் என அனைத்து படிகளை ஏறி இறங்கியும் பயன் இல்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்தும், நீதி கேட்டு பேரணி நடத்தியும் சாலை வசதிக்கு நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை என்கின்றனர்.

இந்த நிலையில், சாலை வசதி அமைத்து தராத ஊராட்சி ஒன்றியத்தை கண்டித்து, பதுவாடி மருத்துவர் காலனி கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து கிராம முக்கிய பகுதிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைத்தும், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களது பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தி தரும் வரை இனி வாக்களிப்பதில்லை என்றும், தேர்தல் நாளில் தங்களது வாக்காளர் அட்டையை அரசிடம் ஒப்படைக்க உள்ளதாகவும் தெரிவித்து உள்ளனர். மேலும், தங்கள் பகுதிக்கு வாக்கு சேகரிக்க வருபவர்களை கட்டி வைக்கப் போவதாகவும் முடிவெடுத்து உள்ளனர். சாலை வசதி அமைத்து தராத நிலையில், வாக்கு சேகரிக்க வருபவர்களை கட்டி வைக்கும் கிராம மக்களின் முடிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: