செவ்வாய், 24 மார்ச், 2026

புதுச்சேரியில் தி.மு.க, காங். ஒரே நாளில் தொகுதிப் பங்கீடு, வேட்புமனு தாக்கல்- கடைசி நேர பரபரப்பு !!!

SHARE

 புதுச்சேரியில் தி.மு.க, காங். ஒரே நாளில் தொகுதிப் பங்கீடு, வேட்புமனு தாக்கல்- கடைசி நேர பரபரப்பு !!!

புதுச்சேரியில் வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசி நாளில் தி.மு.க வும், காங்கிரஸ் கட்சியும் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்து, வேட்பு மனுவை தாக்கல் செய்து உள்ளன.

வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், தி.மு.க 12 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் வி.சி.க தலா 1 தொகுதியிலும் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.

புதுச்சேரியில் ஏப்ரல் 9 ம் தேதி நடைபெறும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றுடன் (மார்ச் 23) நிறைவு பெற்றது. ஆனால், கடைசி நாளில் தான் தி.மு.க - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்ப்பட்டது.

புதுச்சேரியில், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 21 தொகுதகளிலும், தி.மு.க 9 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அவற்றில், காங்கிரஸ் 2 இடங்களிலும், தி.மு.க 6 இடங்களிலும் வெற்றி பெற்றது.

இதனால், 2021 சட்டமன்ற தேர்தலில், தி.மு.க வும், காங்கிரஸ் கட்சியும் தலா 14 தொகுதிகளில் போட்டியிடலாம் என்றும், எஞ்சி இருக்கும் 2 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஆளுக்கு 1 தொகுதியாக பிரித்துக் கொடுத்து விடலாம் என்று தி.மு.க யோசனை தெரிவித்தது. ஆனால், அதனை காங்கிரஸ் ஏற்கவில்லை. இதனால் தொகுதி உடன்பாடு எட்டுவதில் கடைசி நாள் வரை இழுபறி நீடித்தது.

பின்னர் ஒரு வழியாக 12 இடங்களில் போட்டியிடுவதற்கு தி.மு.க ஒப்புக் கொண்டது. காங்கிரஸ் கடந்த முறையை விட குறைவாக, அதாவது 16 தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவானது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, 

"முதலில் புதுச்சேரியில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி காப்பாற்றப்பட்டு விட்டது. இன்னும் யார் ? யார் ?எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்று முடிவாகவில்லை. வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் மார்ச் 26. அன்றைய தினம் தான் முழு விவரம் தெரியவரும். இன்னும் சில நாட்களுக்கு கடினமான பேச்சுவார்த்தை இருக்கும்" என்றார்.

புதுச்சேரியில் தொகுதிப் பங்கீடு இறுதியானது குறித்து புதுச்சேரி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,

 "தி.மு.க - காங்கிரஸ் இடையே ஒரு பரந்த புரிதல் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் பேச்சுவார்த்தை தொடர்கிறது. விரைவில் ஒரு தெளிவு கிடைக்கும்.

புதுச்சேரி சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்படும். உழவர்கரையைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ சிவசங்கரன், ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இது, மக்கள் நிலையான, நம்பகத் தன்மை வாய்ந்த தலைமையை தேர்வு செய்கிறார்கள் என்பதை காட்டுகிறது.

தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். தமிழ்நாட்டில் தி.மு.க கூட்டணி மீது மக்களுக்கு அதிருப்தி ஏதும் இல்லை. இதனால், தமிழ்நாட்டில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றியை பெற்று, மீண்டும் நல்லாட்சியைத் தொடரும்.

புதுச்சேரியில், பா.ஜ.க மீது மக்கள் வெறுப்பு அடைந்து உள்ளனர். எனவே, இந்த முறை அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரிக்க மாட்டார்கள். தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் பா.ஜ.க வலுவான இடத்தை பிடிக்க முயற்சி செய்கிறது. பா.ஜ.க வின் சித்தாந்தம், தமிழ்நாட்டு மக்களுக்கு சற்றும் ஒத்து வராது. பா.ஜ.க தனது கூட்டணி கட்சிகளை கரையான் போல அரித்து விடும்" என்று தெரிவித்தார்.

ரங்கசாமியை எதிர்த்து வைத்திலிங்கம் போட்டி

புதுச்சேரியில், முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் எம்.பி.யுமா வைத்திலிங்கம், தட்டாஞ்சாவடியில் முதல்வர் ரங்கசாமியை எதிர்த்து போட்டியிடுகிறார். மற்றொரு முன்னாள் முதல்வரான வி.நாராயணசாமிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஏனெனில் அவர் போட்டியிடும் நெல்லித்தோப்பு தொகுதியை தி.மு.க வும் கேட்பதால் அதுகுறித்து இன்னும் முடிவாகவில்லை. 

"தி.மு.க மற்றும் காங்கிரஸ் தரப்பில் இருந்து வேட்பு மனுக்கதை திரும்ப பெறுவதும் நடக்கும்" என்று முன்னாள் முதல்வர் நாராயணசாம தெரிவித்து உள்ளார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: