சனி, 28 மார்ச், 2026

கோவை பேரூர் பட்டீஸ்வரர் பங்குனி உத்திர திருவிழா : பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா வரும் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சிவ பக்தர்களால் பரபரப்பு - பட்டீஸ்வரர் தேரோட்டம் நடக்குமா ? என போராட்டத்தில் குதித்த இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்கள் !!!

SHARE

 கோவை பேரூர் பட்டீஸ்வரர் பங்குனி உத்திர திருவிழா : பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா வரும் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட சிவ பக்தர்களால் பரபரப்பு - பட்டீஸ்வரர் தேரோட்டம் நடக்குமா ? என போராட்டத்தில் குதித்த இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்கள் !!!

பராமரிப்பு பணிகள் முடிந்தும் நீடிக்கும் மர்மம் : அதிகாரிகளின் மௌனத்தால் ஆத்திரம் அடைந்த சிவ பக்தர்கள் - போராட்டக் களமாக மாறிய கோவில் வாசல் !!!

தென்கயிலாயம் என்று போற்றப்படும் கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில், உலகப்புகழ் பெற்ற பங்குனி உத்திரத் திருவிழா களைகட்டி உள்ள நிலையில், தேரோட்டம் நடைபெறுமா ? என்ற இழுபறி நீடிப்பது பக்தர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. 

விழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வாக ரிஷப வாகனக் காட்சி, பஞ்சமூர்த்திகள் மற்றும் 63 நாயன்மார்கள் திருவீதி உலா நேற்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக, தேரின் பராமரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று, பக்தர்கள் வெள்ளத்தில் 'வெள்ளோட்டம்' வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் தேரின் உறுதித் தன்மை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பித்த பின்னரும், வரும் 29-ஆம் தேதி நடைபெற வேண்டிய பிரம்மாண்ட திருத்தேர் திருவீதி உலா குறித்து கோவில் நிர்வாகம் இதுவரை எந்தவொரு அதிகாரப் பூர்வ அறிவிப்பும் தராதது சிவன் அடிகளார், பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

​கோவில் நிர்வாகத்தின் இந்த மெத்தனப் போக்கைக் கண்டித்து, நூற்றுக்கும் மேற்பட்ட இந்து அமைப்பினர் மற்றும் சிவனடியார்கள் கோவில் வாசலில் திரண்டு திடீர் 'தர்ணா' போராட்டத்தில் குதித்தனர். 

நள்ளிரவில் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா முடிந்து உற்சவ மூர்த்திகள் மீண்டும் கோவிலுக்குள் நுழைய முயன்ற போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாமியை வழிமறித்து உள்ளே விடாமல் தடுத்ததால் அந்த இடமே பரபரப்பான சூழல் நிலவியது. 

ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் பாரம்பரிய தேரோட்டம் நடைபெறுமா ? இல்லையா ?" என்ற ஒற்றைக் கேள்வியை முன்வைத்து பக்தர்கள் ஆக்ரோஷமாக கோஷமிட்டனர். 

நிலைமை கையை மீறிச் செல்வதை உணர்ந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவனடியார்கள் மற்றும் போராட்டக்காரர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

தேரோட்டம் தொடர்பான இழுபறியால் பேரூர் பகுதியில் தற்போது வரை ஒருவித பரபரப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: