செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் விஜய் கொடியேற்றுவது உறுதி: செங்கோட்டையன் !!!
தேர்தலில் வென்று செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் விஜய் கொடியேற்றுவது உறுதி என த.வெ.க தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வரும் சட்டமன்ற தேர்தலில் த.வெ.க சார்பில் கோபிச் செட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட உள்ளார். இந்நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்ட அவருக்கு, தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகத்திற்கு 100 மீட்டர் தொலைவிலேயே பாதுகாப்பு கருதி காவல் துறையினரால் தொண்டர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். அதன் பின்னர், தேர்தல் விதிமுறைகளின்படி செங்கோட்டையன், மாவட்டச் செயலாளர் பிரதீப் குமார் உள்ளிட்ட ஐந்து நிர்வாகிகள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவானந்தனிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
வேட்பு மனுத் தாக்கலுக்குப் பிறகு செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
”தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்து உள்ளார். அதன் தொடர்ச்சியாக வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. நான் 9 முறை வெற்றி பெற்றதை மக்களின் கொடையாகக் கருதுகிறேன். அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் வெற்றி பெற்று நல்லாட்சி தர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். ஒரு புதிய இயக்கம் உருவாக வேண்டும் என்பது மக்களின் நீண்ட காலக் கனவு. மக்கள் மாற்றம் வேண்டுமென விரும்புகிறார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, சினிமாவின் உச்சத்தில் இருக்கும் போதே விஜய் அரசியலுக்கு வந்து உள்ளார். அவரின் காலம் பொற்காலமாக அமையும். நிச்சயம் மாற்றம் உருவாகும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "விஜய் தலைமையில் த.வெ.க வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. வரும் காலத்தில் புனித ஜார்ஜ் கோட்டையில் விஜய் தேசியக் கொடியை ஏற்றுவார். நான் மக்களை நேசிப்பவன், மக்களும் என்னைத் நேசிக்கிறார்கள். 234 தொகுதிகளிலும் த.வெ.க வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். த.வெ.க ஆட்சி அமைப்பதைத் யாராலும் தடுக்க முடியாது, அது உறுதியாக நடக்கும்” என்றார்.
கோபிசெட்டிபாளையத்தில் அ.தி.மு.க வெற்றி பெறும் என்றும், அந்த வெற்றி நிகழ்ச்சியில் தான் பங்கேற்பேன் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து அவரிடம் கேள்வி எழுபப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,
“எடப்பாடி பழனிசாமி களம் காண முடியுமா ? என்பதை நாளை பார்ப்பீர்கள். அவர் தொகுதியிலும் வேட்பாளர் நிறுத்தப்பட்டு உள்ளார்” என்றும் கூறினார். ஆண்ட கட்சியையும், ஆண்டு கொண்டு இருக்கும் கட்சியையும் தவிர்த்து, மாற்றாக ஒரு புதிய இயக்கம் உருவாக வேண்டும் என்பதே மக்களின் கனவு” என தெரிவித்தார்.

0 கருத்துகள்: