சனி, 14 மார்ச், 2026

வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் தடையற்ற விநியோகம் : மத்திய அரசு மீண்டும் உறுதி !!!

SHARE

 வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் தடையற்ற விநியோகம் : மத்திய அரசு மீண்டும் உறுதி !!!

வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதை மத்திய அரசு உறுதிப்படுத்தி உள்ளது. எனவே, மக்கள் அச்சப்படத் தேவையில்லை’ என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் தெரிவித்தது.

மேற்காசிய போர் நிலவரம் காரணமாக, முக்கிய கப்பல் போக்குவரத்து வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டதால், அந்த வழியாக கப்பல்கள் மூலம் இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய் தடைபட்டு உள்ளது. இந்தியாவுக்கு முக்கிய எரிவாயு விநியோகஸ்தரான கத்தாரும், இயற்கை எரிவாயு உற்பத்தியை முழுமையாக நிறுத்தி விட்டது. இதனால், இந்தியாவில் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்து உள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய பெட்ரோலிய அமைச்சக இணைச் செயலர் சுஜாதா சா்மா கூறியதாவது:

வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. கடந்த 5-ஆம் தேதி முதல் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் காரணமாக, சமையல் எரிவாயு உள்நாட்டு உற்பத்தி 30 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளது. எனவே, முகவர்களிடம் எல்.பி.ஜி சிலிண்டர் தீர்ந்துவிடும் என்ற அச்சம் தேவையில்லை.

மேற்காசிய போருக்கு முன்பாக, சராசரியாக 55.7 லட்சமாக இருந்த சிலிண்டர் முன்பதிவு, போருக்கு பிறகு 75.7 லட்சமாக உயா்ந்து உள்ளது. போதிய இருப்பு உள்ளதால், சிலிண்டர் முன்பதிவு குறித்தும் மக்கள் பீதியடைய வேண்டாம். அதே நேரம், குழாய் வழியில் இயற்கை எரிவாயு விநியோக கட்டமைப்புகளுக்கு அருகிலுள்ள 60 லட்சம் குடியிருப்புகள், வசதிக்கேற்ப சிலிண்டர் பயன்பாட்டில் இருந்து குழாய் வழி எரிவாயு பயன்பாட்டுக்கு மாறுவது குறித்து பரிசீலிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

 சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதுக்கி வைத்து, கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க மாநில அரசுகள் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளன. இதுதொடா்பாக மாநில அரசுத் துறை அதிகாரிகளுடன் மத்திய அமைச்சகம் ஆலோசனையும் மேற்கொண்டது. அப்போது, கள நிலவரத்தை ஆராய்ந்து, பதுக்கல்காரா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதுபோல, பெட்ரோல் விற்பனை நிலையங்களில் கேன்களில் பெட்ரோல் விநியோகிக்கப்படுவதையும் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளன. தமிழகத்தில் இவ்வாறு கேன்களில் பெட்ரோல் விநியோகம் செய்த பெட்ரோல் விற்பனை நிலையத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது என்றார்.

முன்னதாக, மக்களவையில் இதுதொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, ‘இந்தியாவின் 33 கோடி குடும்பங்களின் சமையல் அறைகளில் எந்த வித சமையல் எரிவாயு தட்டுப்பாடும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் மத்திய அரசு உயர் முன்னுரிமை அளித்து வருகிறது.

அதுபோல, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விநியோகத்திலும் எந்தவிதத் தட்டுப்பாடும் இல்லை. எரிபொருள் சில்லறை விற்பனை நிலையங்கள் போதிய இருப்பு வைத்து, தடையற்ற விநியோகத்தை செய்து வருகின்றன’ என்றார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: