என்ஜின் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம் !!!
என்ஜின் கோளாறு காரணமாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், அவசர அவசரமாக டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு (Indigo Airlines) சொந்தமான 6E579 என்ற எண் கொண்ட போயிங் 737 வகை விமானம் 160 பயணிகளுடன் இன்று (மார்ச் 28) காலை ஆந்திரப்பிரதேசம் மாநிலம், விசாகப்பட்டினம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லியை நோக்கி புறப்பட்டு சென்றது. அப்போது, விமானத்தின் உள்ள ஒரு என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக விமானத்தை அவசரமாகத் தரையிறக்க வேண்டும் என்று விமானிகள், விசாகப்பட்டினம் விமான நிலைய அதிகாரிகள் மூலம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதை அடுத்து, காலை 10.39 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது.
அத்துடன், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் இண்டிகோ விமானத்தில் உள்ள பயணிகளை மீட்பதற்காக தயார் நிலையில் இருந்தனர்.
அதிகாரிகள் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து காலை 10.59 மணி அளவில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானிகள் விமானத்தை பத்திரமாகத் தரையிறக்கினர்.
விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். யாருக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை. இண்டிகோ நிறுவனம் மற்றும் விமான நிலைய அதிகாரிகள், பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விமானம் அவசர அவசரமாகத் தரையிறக்கப்பட்ட நிகழ்வு குறித்து இண்டிகோ நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், "இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முன்னெச்சரிக்கை நடடிக்கையாகவும், விதிமுறைகளின் படியும் விமானிகள் விமானத்தைத் தரையிறக்குவதற்கு அனுமதி கோரினர். இதை அடுத்து, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் பத்திரமாக வந்தடைந்தது. உடனடியாக சம்மந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
இதை அடுத்து விரைந்து வந்த அதிகாரிகள், விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே எங்களது முதன்மையான முன்னுரிமையாகும்" எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இண்டிகோ விமானத்தில் பயணித்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: