தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் விஜய் புகார் - டி.ஜி.பி, தலைமை செயலாளர் உள்ளிட்டோரை மாற்ற கோரிக்கை !!!
தலைமைச் செயலாளர், காவல் துறை டி.ஜி.பி உள்ளிட்ட அதிகாரிகளை மாற்றக் கோரி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் த.வெ.க தலைவர் விஜய் புகார் மனு அளித்து உள்ளார்.
சென்னை பெரம்பூரில் விஜய் பங்கேற்க இருந்த பிரச்சார கூட்டத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்து விட்டது. இந்நிலையில், தலைமைச் செயலகத்திற்கு இன்று (மார்ச் 28) நேரில் வந்த த.வெ.க தலைவர் விஜய், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து தனது புகார் மனுவை அளித்தார்.
வரும் சட்டப் பேரவைத் தேர்தலில், சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அந்த தொகுதியில் அவர் இன்று (மார்ச் 28) பிரச்சாரம் செய்ய திட்டமிட்டு, காவல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டு இருந்தது. ஆனால், விஜய் பிரச்சாரத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்ததுடன், மாற்று இடம் கேட்டு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்து இருந்தது.
தனது பிரச்சாரத்திற்கு காவல் துறை அனுமதி மறுத்ததற்கு விஜய் கண்டனம் தெரிவித்து இருந்தார். மேலும், த.வெ.க சார்பில் தாம் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள முயற்சி செய்யும் போதெல்லாம், தி.மு.க அரசு தேவையில்லாத காரணங்களைக் கூறி, அனுமதியைத் தாமதிப்பதும் அல்லது மறுப்பதும் தொடர் கதையாகி வருகிறது என்றும் குற்றஞ்சாட்டி இருந்தார்.
இதற்கு இடையே, த.வெ.க தலைவர் விஜய், சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் புகார் மனு ஒன்றை அளித்து உள்ளார். அதில், "பெரம்பூரில் த.வெ.க பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. சாலையில் குழி தோண்டி தடுப்புகளை வைத்து உள்ளனர். விதிமுறைகள் ஒருதலைபட்சமாக அமல்படுத்தப்படுகின்றன. எதிர்க்கட்சிகளின் கூட்டங்களுக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்படுகிறது. புகார் கொடுத்தால் பதிலும் கிடைப்பதில்லை. இதனால் எங்களால் நிகழ்ச்சியை திட்டமிட இயலவில்லை.
தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வேண்டும் எனில், அதிகாரிகள் நேர்மையான முறையில் பணியாற்றிட வேண்டும். ஆனால், அரசு இயந்திரம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது. எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்வதற்கு சமவாய்ப்பு வழங்கப்படுவதில்லை. சட்டம் - ஒழுங்கு விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக அமல்படுத்தப்படுவதில்லை. களத்தில் நெருக்கடிக்கு மத்தியில் அலுவலர்கள் பணியாற்றுகிறார்கள்.
இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறி இலவச பொருட்களை வாக்காளர்களுக்கு வழங்குவதில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக சில அலுவலர்கள் செயல்படுவதாக எங்களுக்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்து உள்ளன.
எனவே, காவல் துறை டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர், சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி, உளவுத்துறை ஏ.டி.ஜி.பி, ஆயுதப்படை டி.ஜி மற்றும் சென்னை மாநகர ஆணையர், தலைமைச் செயலாளர், உள்துறை செயலர், முதல்வரின் செயலாளர், நிதித்துறை செயலாளர் ஆகியோரின் செயல்பாடுகளை தேர்தல் ஆணையம் பரிசீலித்து, தேவையெனில் அவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.
மேலும், தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி அளிப்பதில் வெளிப்படையான நடைமுறை அமல்படுத்தப்பட வேண்டும். சிறப்பு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்" எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

0 கருத்துகள்: