திங்கள், 9 மார்ச், 2026

கூட்டு பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட மாணவியை திருமணம் செய்ய காதலன் சம்மதம் !!!

SHARE

கூட்டு பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட மாணவியை திருமணம் செய்ய காதலன் சம்மதம் !!!

கோவையில் கூட்டு பாலியல் பலாத்காரம் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியை திருமணம் செய்ய காதலன் சம்மதம் தெரிவித்து உள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

மதுரையைச் சேர்ந்த 21 வயது மாணவி கோவையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி ஒரு கல்லூரியில் முதுகலை படிப்பு படித்து வந்தார். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் தேதி இரவு 10:30 மணி அளவில் தனது காதலனுடன் விமான நிலையம் பின்புறம் பிருந்தாவன் நகரில் காரில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்.

அப்பொழுது அங்கு வந்த மூன்று பேர் மாணவியை அரிவாளை காட்டி மிரட்டினர், இதை அவருடைய காதலன் கண்டித்தார். உடனே கார் கண்ணாடியை அரிவாளால் உடைத்து காதலனை வெட்டினர். பின்னர் அவர்கள் மாணவியை தூக்கி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதில் தொடர்புடைய குற்றவாளிகளான சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சகோதரர்களான கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் மதுரையைச் சேர்ந்த தவசி ஆகிய மூன்று பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தரராஜன், கைதான மூன்று பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூபாய் ஏழு லட்சம், அரிவாளால் வெட்டப்பட்டு காயம் அடைந்த காதலனுக்கு ரூபாய் 2 லட்சம் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட மாணவியின் நிலை குறித்து இந்த வழக்கில் ஆஜராகி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த அரசு வழக்கறிஞர் ஜிஷா கூறும் போது.

இந்த கொடூர சம்பவத்துக்கு பிறகு கல்லூரி மாணவி மன ரீதியாக மிகவும் விரக்தி அடைந்த நிலையில் இருந்தார். எனவே அவருக்கு பல்வேறு அறிவுரை கூறி கேட்டறிந்ததாகவும், மருத்துவர்கள் மூலமும் மாணவிக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டதாகவும், மாணவி தற்போது நலமுடன் உள்ளார். மாணவியை மன ரீதியாக தேற்ற காதலன் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்தார். வழக்கு விசாரணைக்காக அந்த மாணவி மதுரையில் இருந்து அடிக்கடி வர வேண்டி இருந்ததால், அவருடைய காதலன் பெற்றோரின் சம்மதத்துடன் தனது வீட்டில் அறை ஒதுக்கி கொடுத்து தங்க வைத்தார். மாணவிக்கு அவரது காதலனுக்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பு instagram மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

அப்பொழுது மாணவி +2 படித்து வந்து உள்ளார் பின்னர் பட்டப் படிப்பை மதுரையில் முடித்து உள்ளார். முதுகலை படிப்பை கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் தொடர்ந்து உள்ளார். காதலன் ஆட்டோ கன்சல்டிங் நிறுவனம் நடத்தி வருகிறார். ஐந்தாண்டுகளாக பழகி காதலித்து வந்த நிலையில் மாணவி பாதிக்கப்பட்டது. அவருடைய காதலனுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது.


இதனால் மாணவியை திருமணம் செய்ய காதலன் சம்மதித்து உள்ளார். நடந்த கொடூர சம்பவத்தை ஒரு கெட்ட கனவாக மறந்து விட்டு, மாணவியோடு வாழ்க்கையில் இணைய முடிவு செய்து உள்ளதாக காதலன் கூறினார் என்று அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜிஷா கூறினார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: