மாநிலங்களவை அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரை - பா.ம.க வுக்கு ஒரு இடம் !!!
மாநிலங்களவை அ.தி.மு.க வேட்பாளராக தம்பிதுரை அறிவிக்கப்பட்டு உள்ளார்.
பா.ம.க வுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு செய்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதில், தி.மு.க சார்பில் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அ.தி.மு.க வின் தம்பிதுரை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரின் பதவிக் காலம் முடிவடைகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு உள்பட நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனுத் தாக்கலுக்கு நாளை (மார்ச் 5) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மார்ச் 6 ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும், மார்ச் 9 ஆம் தேதிக்குள் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 இடங்களில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 இடங்கள் தி.மு.க வுக்கும் 2 இடங்கள் அ.தி.மு.க வுக்கும் கிடைக்கும்.
அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ம.க வுக்கு ஒரு மாநிலங்களவை இடத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். எஞ்சி உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினருக்கான வேட்பாளராக தம்பிதுரையை அவர் அறிவித்து உள்ளார்.

0 கருத்துகள்: