ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை - டி.என்.ஏ பரிசோதனையில் தகவல் !!!
ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என மரபணு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தார். அதன் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஜாய் கிரிசில்டா அவரது சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பதிவுகளில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் இணைத்து இருந்தார்.
அதை எதிர்த்து மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக மாதம்பட்டி ரங்கராஜ் - ஜாய் கிரிசில்டா இடையே மத்தியஸ்தம் செய்ய உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி பி.என்.பிரகாஷை நியமித்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது, தனது குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என நிரூபிக்க, அவருக்கு மரபணு சோதனை நடத்தப்பட வேண்டும் என ஜாய் கிரிசில்டா தரப்பிலும், மரபணு சோதனைக்கு தயார் என மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
இது சம்பந்தமாக இரு தரப்பிலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள தடயவியல் துறையையும், ஆய்வகத்தையும் தொடர்பு கொண்டு, மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, வழக்கறிஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு சோதனை நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டு உள்ள ஓய்வு பெற்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் முன், சீல் வைத்த கவரில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாக வழக்கறிஞர் ஆணையர் (Advocate Commissioner) தெரிவித்தார்.
அந்த அறிக்கையில், கிரிசில்டவின் குழந்தைக்கு மதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என தெரிய வந்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இதை அடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே மத்தியஸ்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து, வழக்கு விசாரணையை ஜூன் 8 ஆம் தேதிக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

0 கருத்துகள்: