ஞாயிறு, 22 மார்ச், 2026

ஜனநாயகன் படத்தை டெல்லியில் உள்ளவர்கள் தடுக்கிறார்கள் - ஆதவ் அர்ஜூனா !!!

SHARE

 ஜனநாயகன் படத்தை டெல்லியில் உள்ளவர்கள் தடுக்கிறார்கள் - ஆதவ் அர்ஜூனா !!!

ஜனநாயகன் பட வெளியீட்டை டெல்லியில் உள்ளவர்கள் தடுக்கிறார்கள் என ஆதவ் அர்ஜூனா குற்றம்சாட்டி உள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் விறுவிறுவென நடைபெற்று வரும் சூழலில், ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் அலுவலகத்தை தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) தொடங்கி உள்ளது. அக்கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர் ஆதவ் அர்ஜூனா அலுவலகத்தை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தண்டையார்பேட்டை சேனி அம்மன் கோவில் தெருவில் வடசென்னை மாவட்டம் சார்பில் கொள்கை விளக்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுறா வேலு தலைமை, ஆர்.கே.நகர் தொகுதி பொறுப்பாளர் மரியா வில்சன் ஆகியவர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக தேர்தல் மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜுனா, நாஞ்சில் சம்பத், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் பேசிய மரியா வில்சன், “கடந்த 8 நாட்களாக ஆர்.கே நகரில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல விஷயங்களை பார்த்து உள்ளேன். மக்களிடமும் பேசி உள்ளேன். 50 ஆண்டுகளாகவும், அதற்கு மேலாகவும் பல துரோகங்கள் இழைக்கப்பட்டு உள்ளது. ஆர்.கே நகர் மக்களுக்கு நிறைய கொடுக்க வேண்டி உள்ளது. இப்பகுதியில் இருந்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், மருத்துவர் என அனைவரும் வரும் 15 ஆண்டுகளில் வர வேண்டும். இங்கு பெருவாரியாக குழந்தைகளுடன் வசிக்கும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளார்கள். 25 இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

மேலும் கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா கூறியதாவது, ”அண்ணா நகருக்கும், ஆர்.கே நகருக்கும் வித்தியாசம் உள்ளது. வடசென்னை ஏழ்மை சூழ்நிலையிலேயே உள்ளது. மற்ற தொகுதிகள் போல வளர்ந்த தொகுதியாக இப்பகுதி மாறவில்லை. தி.மு.க எதிர்கட்சியாக இருந்த போது, ஆளுங்கட்சியான அ.தி.மு.க வை வீழ்த்தவும், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான போராட்டங்களையும் தி.மு.க தலைவரும், முதல்வருமான ஸ்டாலினுடன் இருந்து செய்து உள்ளேன். அதனால் தி.மு.க என்ன மாறியான செயல்பாடுகளை செய்யும் என்பதை அறிவேன்.

மேலும் எம்.ஜி.ஆர் கட்சியை தொடங்கிய போது, அவருக்கு இருந்த ஆதரவை விட நமது தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்த போது ஆதரவு அதிகம் உள்ளது. பா.ஜ.க வும், அ.தி.மு.க வும் நாம் கூட்டணிக்கு வருவோம் என்று எதிர்பார்த்து இருந்தனர், நாம் கூட்டணியில் இணைவோம் என்று கூறிக் கொண்டு இருந்தனர். நாம் கூட்டணியில் சேர மாட்டோம் தனித்துப் போட்டியிடுவோம் என்று நமது தலைவர் அறிவித்தார். அதற்குப் பின்பு தான் அ.தி.மு.க வும், பா.ஜ.க வும் தங்களுடைய பிரச்சாரத்தை தொடங்கினர். அதில் கரூரில் 41 பேர் இறந்த சம்பவத்தை வைத்து தவறாகப் பிரச்சாரம் பேசி வருகிறார்கள்.

கடந்த 6 மாதங்களாக எவ்வளவு வேதனையில் இருந்தோம் என்று உங்களுக்கு தெரியும், அ.தி.மு.க வையும், பா.ஜ.க வையும் எதிர்க்கும் சக்தியாக தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உள்ளார். ஜனநாயகப் படத்தை வெளியிடமால் செய்ய டெல்லியில் உள்ளவர்கள் தடுக்கிறார்கள். எத்தனை கூட்டணி கட்சிகள் வந்தாலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்து நின்று வெற்றி பெறும்” என பேசினார்.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: