தி.மு.க கூட்டணியில் இருந்து விலகிய த.வா.க தலைவர் வேல்முருகன் - தி.மு.க வின் அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவர் பரந்தூரில் ஆயிரக் கணக்கான ஏக்கர் இடம் வாங்கி உள்ளதாக குற்றச்சாட்டு !!!
சமூக நீதிக்கு எதிரான கூட்டத்தை வைத்துக் கொண்டு தி.மு.க எப்படி ? சமூக நீதியைப் பின்பற்றும் ? - த.வா.க வேல்முருகன் கேள்வி .
நீங்கள் யார் ? டிமாண்ட் வைப்பதற்கு என்ற தொணியில் தி.மு.க வினர் பேசினர் - த.வா.க வேல்முருகன் ....
தங்களின் 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்றப்படாததால் தி.மு.க கூட்டணியில் இருந்து விலகுவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்து உள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன்,
"2019 நாடாளுமன்றத் தேர்தல் முதல் தி.மு.க கூட்டணியில் பயணித்து வந்தோம். இந்த சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு தி.மு.க வால் அழைக்கப்பட்டு பேச்சுவார்த்தையும் நடைபெற்றது.
தி.மு.க வின் பேச்சுவார்த்தைக் குழு தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு இடத்தை ஒதுக்குவதாக தெரிவித்தனர்.
தொகுதிகளை ஒதுக்குவதில் முன் பின் இருந்தாலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு என்று தனியாக கொள்கை உள்ளது.
விவசாயிகள், மாணவர்கள், தாய்மார்கள் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில் 10 அம்ச கோரிக்கைகளை தி.மு.க வின் பேச்சுவார்த்தைக் குழுவிடம் வழங்கினோம். அதே கோரிக்கையை தமிழ்நாடு சட்டமன்றத்திலும் தான் பேசியிருந்தேன் என்றும், ஆனால், தி.மு.க அரசு நான் சொன்ன கோரிக்கைகள் குறித்து சிறிதளவும் பொருட்படுத்தவில்லை. தி.மு.க வை பொறுத்த வரை காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் கோரிக்கை வைக்காமல் தங்களுடன் கூட்டணி வைத்து உள்ளனர். நீங்கள் தொடர்ந்து கோரிக்கைகளை முன் வைத்து வருவது கூட்டணிக்கு சரிவராது என்பது தி.மு.க வின் பதிலாக இருந்தது.
வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் தனக்கு உள்ளது. நெய்வேலி பகுதியில் வீடுகள், கோவில்கள், மசூதி, தேவாலயம் இடித்து நிலக்கரி சுரங்கம் அமைக்க மத்திய அரசுடன் சேர்ந்து தி.மு.க அரசு செயல்படுகிறது. வேல்முருகன் தி.மு.க அரசிற்கு குடைச்சலாக உள்ளார் என்று முதலமைச்சரிடம் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தி.மு.க அரசில் அதிகாரிகளின் ஆட்சி தான் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. சிலர் தி.மு.க ஆட்சியில் இருந்து கொண்டு பாசிசத்திற்காகக் கொடி பிடிக்கின்றனர்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியை தி.மு.க அரசு புறக்கணித்து உள்ளது. சமூக நீதிக்கு எதிரான கூட்டத்தை வைத்துக் கொண்டு தி.மு.க எப்படி ? சமூக நீதியைப் பின்பற்றும் ? தி.மு.க அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை எடுக்கவில்லை. வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% ஒதுக்கீடு இன்னும் சட்டமாக கொண்டு வரப்படவில்லை. தி.மு.க ஆட்சியில் தமிழ் மக்களுக்கான சமூகநீதி கிடைக்கவில்லை.
முதலமைச்சருக்கு சுயமாக சிந்தித்து முடிவெடுப்பதற்கு அனுமதி மறுத்து அதிகாரிகள் கொட்டமடித்துக் கொண்டு இருக்கின்றனர். தேர்தல் களத்திலும் அதிகாரிகள் குழப்பங்களை விளைவித்து உள்ளனர். தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இத்தனை ஆண்டு காலம் இருந்தேன். ஐந்தாண்டு காலம் மக்கள் பணியாற்ற வாய்ப்பு கொடுத்த தமிழ்நாடு முதலைமைச்சருக்கு நன்றி.
தி.மு.க வில் உள்ள கூட்டணி கட்சியினர் என்னை தொடர்புக் கொண்டு பேசினர். அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தி.மு.க கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது. நாங்கள் வைத்து உள்ள 10 கோரிக்கைகளை ஏற்று கொண்டு உள்ள அமைப்புகளுடனும், அரசியல் கட்சிகளுடனும் கலந்துப் பேசி நாங்கள் இந்த 2026-ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்வது குறித்து பத்திரிகையாளர்களை அழைத்து அதிகாரப் பூர்வமாக நான் அறிவிக்க இருக்கிறேன் என்றார்.
தனித்து நான் எந்த முடிவும் எடுக்க முடியாது. தி.மு.க நிர்வாகிகள் என்னிடம் பேசிக் கொண்டு தான் இருந்தனர். கட்சியின் அனைத்து தரப்பு நிர்வாகிகளிடம் பேசி முடிவு எடுக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள கட்சிகளில் பத்தோடு நான் இல்லை. நீங்கள் ஒரு சிறிய கட்சி, எங்களைப் பார்த்து என்ன டிமாண்ட் வைப்பது என பெரியண்ணன் பாணியில் எங்களைப் பார்த்து அவர்கள் பேசுகின்றனர். அதனை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.
நீங்கள் யார் ? டிமாண்ட் வைப்பதற்கு என்ற தொணியில் தி.மு.க வினர் பேசினர். நான் ஓட்டு அரசியலில் இருந்து விலகி மக்களுக்கு பணியாற்ற வந்தவன். எந்த நோக்கமும் இல்லாமல் கூட்டணியை விட்டு வெளியேறி உள்ளோம். தேர்தலுக்கு மட்டும் தொகுதி உடன்பாடு. தேர்தலுக்குப் பிறகு அதனை எங்கள் கொள்கையில் பயணிக்கும் வகையில் முடிவு செய்ய உள்ளோம். என்.டி.ஏ தலைமையிலான கூட்டணிக்கு செல்ல மாட்டோம்.
ஆனால் அதே தி.மு.க விளிம்பு நிலை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. பா.ஜ.க ஆதரவாளர்கள் தி.மு.க வை இயக்குகிறார்கள். நீ எல்லாம் கூட்டணியில் டிமாண்ட் வைத்து பேசுகிறாயா ? என தி.மு.க வினர் கேட்கின்றனர். சமூகநீதி இயக்கத்தின் வழி வந்தவர் தானே மு.க.ஸ்டாலின்; அவர் ஏன் ? சமூகநீதி பற்றி சிந்திக்கவில்லை. தி.மு.க அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவர் பரந்தூரில் ஆயிரக்கணக்கான ஏக்கர் இடம் வாங்கி உள்ளார். அதை ஐந்து மடங்கு கொடுத்து அரசு வாங்குகிறது. அதில் வேல்முருகன் குடைச்சல் கொடுக்கிறார் என்று என்னை எதிர்க்கின்றனர். வேல்முருகன் தி.மு.க விற்கு பெரிய குடைச்சல் என தி.மு.க நிர்வாகிகள் பகிரங்கமாக பேசி உள்ளனர்.
தி.மு.க கூட்டணியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வி.சி.க வெளியேறுவதாக தெரியவில்லை. நான் தற்போது செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூட என்னை தொடர்புக் கொண்டு சமாதானப்படுத்த முயற்சி செய்தனர்.
காங்கிரஸுக்கு கொடுக்கிறீர்கள், தே.மு.தி.க விற்கு கொடுக்கிறீர்கள், கமல்ஹாசனுக்கு கொடுக்கிறீர்கள் பரவாயில்லை, எங்களுக்கு சீட்டு கூட பிரச்சனை இல்லை, நாங்கள் சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்கலாமே ? முதலமைச்சரின் கைகள் கட்டப்பட்டு உள்ளது.
முதலமைச்சரைச் சந்திக்க எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. முதலமைச்சர் தனிப்பட முறையில் என்னிடம் நன்றாகப் பேசுகிறார்
ஆனால் தமிழ் சமூகத்திற்காக வைத்த கோரிக்கையை தி.மு.க நிறைவேற்றவில்லை. எங்களைக் கூடவே வைத்துக் கொண்டு வலுவான மாற்று அணியாக வரக் கூடாது என்று கடைசி நேரத்தில் இப்படி செய்து உள்ளனர். ஒத்தக் கருத்துடைய அமைப்புகளுடன் இணைந்து தனித்து போட்டியிட தயார். விளிம்புநிலை மக்களுக்கான 25 அமைப்புகள் என்னிடம் பேச வந்து உள்ளனர். நான் தி.மு.க விடம் 6 தொகுதிகள் கேட்டேன், 4 தொகுதிகள் கேட்டேன், 3 தொகுதிகளாவது கொடுங்கள் என கேட்டேன். தொகுதிக்கூட பரவாயில்லை, எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என்று தி.மு.க குழுவிடம் பேசினேன். இந்தப் கோரிக்கைகளை தி.மு.க மதிக்கவில்லை.
கடந்த ஐந்தாண்டு காலம் ஆட்சியில் எந்த அமைச்சர்கள், எந்த துறை செயலாளர்கள் அவர்களது துறையில் எவ்வளவு தவறுகள் செய்து உள்ளார்கள் என்பதற்கு ஆதாரம் என்னிடம் உள்ளது.
இனிமேல் தான் பார்க்க போகிறீர்கள். எனக்கு சீட்டு பிரச்னை இல்லை. எனக்கு பதவி தேவை இல்லை. ஒரு சீட்டுக்கு, இரண்டு சீட்டுக்கு நிற்பவன் வேல்முருகன் இல்லை. மக்களின் கோரிக்கை தான் எனக்கு பிரதானம்" என்றார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியில் தி.மு.க வில் இருந்து வெளியேறிய முதல் கட்சி தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: