புதன், 18 மார்ச், 2026

மாணவர்கள் அறையில் புகுந்து லேப்டாப் திருட்டு : கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் - அதிர்ச்சி ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் !!!

SHARE

 மாணவர்கள் அறையில் புகுந்து லேப்டாப் திருட்டு : கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் - அதிர்ச்சி ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள் !!!

அறை ​கதவைத் திறந்து வைத்து விட்டு குளிக்கச் சென்ற போது துணிகரம் ; கல்லூரி மாணவர்கள் அச்சம் !!!

கோவையின், சரவணம்பட்டி பகுதியில், கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த அறைக்குள் புகுந்து மர்ம நபர்கள் லேப்டாப் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 மாணவர்கள் அறையில் புகுந்து திருடர்கள் கைவரிசை காட்டியுள்ள சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி, மாணவர்கள் இடையே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கி உள்ளது.

கோவை வையாபுரி நகரைச் சேர்ந்த சித்தார்த் என்பவர், சரவணம்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் குரும்பபாளையம் பகுதியில் தனது நண்பர்கள் 7 பேருடன் சேர்ந்து அறை எடுத்துத் தங்கிப் படித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 15) அதிகாலை, சித்தார்த் உடற்பயிற்சிக்குச் செல்வதற்காகத் தயாராகி உள்ளார்.

​அப்போது, அறையின் முன்பக்கக் கதவைத் திறந்து வைத்து விட்டு அவர் குளியலறைக்குச் சென்று உள்ளார். இந்நிலையில் அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள், சட்டென்று அறைக்குள் புகுந்து அங்கு இருந்த லேப்டாப் பையைத் திருடிக் கொண்டு தப்பிச் சென்றனர். 

குளித்துவிட்டு வந்து பார்த்த சித்தார்த், லேப்டாப் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, இரண்டு நபர்கள் சாவகாசமாக அறைக்குள் நுழைந்து லேப்டாப் பையைத் தூக்கிக் கொண்டு வெளியேறும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இது குறித்து சித்தார்த் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் திருடர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.

​கோவையில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான வெளியூர் மாணவர்கள் தங்கிப் படிப்பதால், அவர்களைக் குறிவைத்து இது போன்ற திருட்டுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகப் புகார்கள் எழுந்து உள்ளன. 

"மாணவர்கள் அதிகாலை அல்லது இரவு நேரங்களில் கதவுகளைச் சரியாகப் பூட்டி வைத்து குருக்க வேண்டும் என்றும், அறிமுகமில்லாத நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனே போலீசாருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்" என்றும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருவது. குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 கருத்துகள்: