சவால்களை எதிர்கொள்ள இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு !!!
மேற்காசியாவில் நடைபெற்று வரும் போரினால் உருவாகும் சவால்களை எதிர்கொள்ள இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் நரேந்திர மோடி, 'மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்கள் இடையே உரையாற்றி வருகிறார். அந்த வகையில், 132-வது முறையாக இன்று (மார்ச் 29) 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததாவது,
"ஐ.சி.சி டி20 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய ஆடவர் அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்றது. கடந்த மாதம் கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு உற்சாகம் நிறைந்ததாக இருந்தது. இந்த வெற்றி நாட்டு மக்களைப் பெருமிதம் கொள்ளச் செய்தது. அதேபோல், கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக ரஞ்சிக்கோப்பையை ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் அணி வென்றதன் மூலம் உள்நாட்டு கிரிக்கெட்டில் முக்கிய மைல்கல் சாதனையைப் பதிவுச் செய்து உள்ளது. கிரிக்கெட் வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் பலனே இந்த சாதனைக்கு காரணம்" என்றார்.
ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பராஸ் டோக்ராவின் (Paras Dogra) பங்களிப்பு மற்றும் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபியின் (Auqib Nabi) சிறப்பான ஆட்டத்தைப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி, அவுகிப்பின் 60 விக்கெட் சாதனையை எடுத்துரைத்தார். அத்துடன், ஜம்மு-காஷ்மீர் அணியின் வெற்றிக்கு இளம் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபி உதவி உள்ளார் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய அவர் "இந்த வரலாற்று சாதனை கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள், ஊழியர்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மக்கள் இடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சாதனை ஜம்மு-காஷ்மீரில் உள்ள இளைஞர்கள் இடையே விளையாட்டு மீதான ஆர்வத்தை மேலும் தூண்டும். அண்மையில் குல்மார்க்கில் நடைபெற்ற கேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பிற விளையாட்டுப் போட்டிகளுக்கான மையமாக ஜம்மு-காஷ்மீர் உருவாகி வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் விளையாட்டு வீரர்களின் வெற்றி தொடரும்; இதன் மூலம் இப்பகுதி முழுவதும் உள்ள இளைஞர்களின் திறமைகளை ஊக்குவிக்கும்" என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "மேற்காசியாவில் நடைபெற்று வரும் போரினால் உருவாகும் சவால்களை எதிர்கொள்ள நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று 140 கோடி இந்திய மக்களை நான் மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்; வதந்திகளுக்கு இரையாகி விடக் கூடாது.
மேற்காசியாவில் வசிக்கும் இந்தியர்கள், பணி புரிபவர்கள் என சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கி வரும் வளைகுடா நாடுகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறி உள்ளார்.

0 கருத்துகள்: