ரமலான் போன்ற பண்டிகை காலங்களில் முஸ்லீம்களின் தொழுகைக்காக இலவசமாக நிலம் வழங்கிய இந்து சகோதரர்கள் : ராஜஸ்தானில் நெகிழ்ச்சி சம்பவம் !!!
இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்காக, குஹாலா கிராமத்தைச் சேர்ந்த இந்து சகோதரர்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தை இலவசமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ராஜஸ்தானின் சிகர் மாவட்டத்தில் அமைந்து உள்ளது குஹாலா கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 7,000 மக்கள் சாதி, மத வேறுபாடின்றி நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இங்கு இஸ்லாமியர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், சைனிகள் என சுமார் 36 சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வசித்து வரும் நிலையில், அவர்களின் ஒருமைப்பாடு இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு எடுத்துக் காடாக திகழ்கிறது.
இந்த கிராமத்தில் ஈத்காவில் (தொழுகை நடத்தப்படும் இடம்), வருகை தரும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தது. அருகில் உள்ள கிராம மக்களும் இங்கு தொழுகை நடத்த வருவதால், இடப்பற்றாக்குறை நிலவுவதாக உள்ளூர் இஸ்லாமியர்கள் கருதினர்.
எனவே, ரமலான் மாதங்களின் அதிக அளவில் இஸ்லாமியர்கள் கூடி தொழுகை நடத்த முடியாத நிலை இருந்து உள்ளது. இது போபால் ராம் சைனி, பூரன்மல் சைனி உள்பட 5 சகோதரர்கள் கவனத்திற்கு வந்து உள்ளது. உடனடியாக, சைனி சகோதரர்கள் இணைந்து, தங்களுக்கு சொந்தமான நிலத்தை தொழுகைக்காக கொடுக்க முன் வந்து உள்ளனர்.
இதற்காக எந்த பணத்தையும் தாங்கள் எதிர்பார்க்கவில்லை என சைனி சகோதரர்கள் ஈடிவி பாரத்திடம் தெரிவித்து உள்ளனர். “எங்கள் குடும்பத்தினர் எவ்விதத் தயக்கமுமின்றி நாங்கள் வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டனர். இஸ்லாமிய சமூகத்தினர் அந்த இடத்திற்கு ஈடாக பணம் கொடுக்க முன் வந்தனர். ஆனால், நாங்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டோம்” என்று பூரன்மால் சைனி நம்மிடம் பூரிப்புடன் தெரிவித்தார்.
மேலும், தாங்கள் இந்த நிலத்தை வழங்கியது பொருள் ஆதாயத்தை எதிர்பார்த்து அல்ல என்று கூறிய பூரன்மால் சைனி, அதை விட சகோதரத்துவத்தையும், அன்பையும் மட்டுமே பெரிதாக மதிப்பதாக அவர் கூறினார்.
வெறும் நிலத்தை மட்டுமே வழங்கி விட்டு, சைனி சகோதரர்கள் சும்மா இருக்கவில்லை. தொழுகை இடத்தின் கட்டுமானத்திலும் அவர்களின் பங்களிப்பு இருந்து உள்ளது. அதனை சுற்றி மதில் சுவர் எழுப்பும் போது, பணியாட்களுடன் சைனி சகோதரர்களும் இணைந்து வேலை பார்த்து உள்ளனர். ரமலான் திருநாளின் போது, இவர்கள் இஸ்லாமிய மக்கள் முன்னிலையில் வைத்து இஸ்லாமிய மத குருக்கள் பாராட்டி உள்ளனர்.
எனினும், இந்த நிலத்தை இஸ்லாமியர்களின் தொழுகைக்கு வழங்கிய போது சில சிக்கல்கள் இருந்ததை சைனி சகோதரர்கள் பகிர்ந்தனர். குடும்ப உறுப்பினர்கள் சிலர் மட்டும், “ஏன் இஸ்லாமியர்கள் தொழுகை செய்ய நாம் நிலம் வழங்க வேண்டும்” என்று எதிர் கருத்துகளை முன் வைத்தனர்.
ஆனால், நாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக இருந்ததால், இந்த மதநல்லிணக்கம் சாத்தியமானது என பூரன்மால் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

0 கருத்துகள்: