கோவையில் நடைபயிற்சி சென்ற நபர் : சூழ்ந்த தெருநாய்கள் - அதிர்ச்சி ஏற்படுத்தும் சி.சி.டி.வி காட்சிகள்....
சாலையில் தெருநாய்கள் அட்டகாசம்; அலறி அடித்த நபர் - நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்குக் கோரிக்கை !!!
கோவை சுந்தராபுரம் – மதுக்கரை சாலையில் அமைந்து உள்ள மெகாசிட்டி பகுதியில் இன்று காலை நடைபயிற்சிக்குச் சென்ற நபரை தெருநாய்கள் கூட்டமாகச் சூழ்ந்து தாக்க முயன்ற சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிர்ஷ்டவசமாகப் அந்த நபர் காயமின்றி தப்பினார்.
மெகாசிட்டி பகுதியைச் சேர்ந்த யோகேஷ் என்ற இளைஞர், இன்று அதிகாலை வழக்கம் போல் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டு வந்து உள்ளார். அப்போது சாலையோரத்தில் குழுமி இருந்த சுமார் 5-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் திடீரென ஆக்ரோஷமாக அவரைச் சூழ்ந்து கொண்டு குரைத்துத் தாக்க முயன்றன.
இதனால் நிலைகுலைந்து போன யோகேஷ், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளப் போராடினார்.
அவரது அலறல் சத்தத்தைக் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து நாய்களை விரட்டியதால், தப்பினார்.
இந்தச் சம்பவம் யோகேஷையும் அந்தப் பகுதி மக்களையும் கடும் பீதியில் ஆழ்த்தி உள்ளது.
"மெகாசிட்டி மற்றும் மதுக்கரை சாலைப் பகுதிகளில் சமீப காலமாகத் தெருநாய்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் வெளியே வர அஞ்சும் நிலை உள்ளது" என அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாகப் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை எந்தவித ஆக்கப் பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற குற்றம் சாட்டினர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தாலும், பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு,
தெருநாய்களைப் பிடித்துக் கருத்தடை செய்ய வேண்டும். நாய்கள் கூட்டமாகத் திரியும் இடங்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்த வேண்டும். என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

0 கருத்துகள்: