நூலிழையில் உயிர் தப்பிய தொழிலாளி - கோவையில் நள்ளிரவில் யானை விரட்டும் 'பதைபதைக்கும்' CCTV காட்சி !!!
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில், ஒற்றைக் காட்டு யானை தொழிலாளி ஒருவரைத் துரத்தித் தாக்க முயலும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்கள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
வனப் பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் ஊருக்குள் புகுந்து சேதங்களை விளைவித்து வரும் நிலையில், இந்த 'ஷாக்' வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று நள்ளிரவு சுமார் 1 மணி அளவில், கதிர்நாயக்கன்பாளையம் ரேணுகா புரம் பகுதியில் ஒரு ஒற்றைக் காட்டுயானை சுற்றித் திரிந்து உள்ளது. அந்தப் பகுதியில் நடைபெற்று வரும் ஒரு கட்டிடப் பணியில் தங்கி இருந்த தொழிலாளி ஒருவர், நள்ளிரவில் சிறுநீர் கழிப்பதற்காக வெளியே வந்து உள்ளார். அப்போது திடீரென யானை முன்னே நிற்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அருகில் இருந்த தனது வாகனத்தைப் பத்திரப்படுத்த முயன்று உள்ளார்.
யானை அவரைக் கண்டதும் ஆக்ரோஷத்துடன் துரத்திச் சென்று தாக்க முயன்றது. சுதாரித்துக் கொண்ட அந்தத் தொழிலாளி, யானையிடம் இருந்து தப்பிக்க மின்னல் வேகத்தில் ஓடினார். யானை மிக அருகில் வந்தபோதிலும், அவர் நூலிழையில் உயிர் தப்பினார். இருப்பினும், ஓடும் போது நிலைதடுமாறி விழுந்ததில் அவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டு உள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் இதே ஒற்றை யானை கதிர்நாயக்கன்பாளையம் சி.ஆர்.பி.எஃப் (CRPF) வளாகத்திற்குள் புகுந்து, அங்கு இருந்த சமையல் அறையில் இருந்த உணவுப் பொருட்களைச் சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பொதுமக்கள் தேவையற்ற முறையில் வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும்.
வீட்டின் வெளிப் பகுதிகளில் உணவுப் பொருட்கள் அல்லது கழிவுகளைப் போட வேண்டாம்.
யானை தென்பட்டால் சுயமாக விரட்ட முயற்சிக்காமல் உடனடியாக வனத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
தற்போது அந்தப் பகுதியில் வனத் துறையினர் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

0 கருத்துகள்: