மக்களுக்கான திட்டமா ? மதுப்பிரியர்களுக்கான கூடாரமா ? - கோவை சூலூரில் தி.மு.கவினர் அட்ராசிட்டி !!!
கோவை மாவட்டம் சூலூர் பழைய பேருந்து நிலையப் பகுதியில், சூலூர் பேரூராட்சி மற்றும் தனியார் மருத்துவமனை பங்களிப்புடன் மாவட்டத்தின் முதல் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டு உள்ளது. நவீன வசதிகளுடன் மக்கள் பயன்பாட்டிற்கு வரவிருந்த இந்தத் திட்டம், திறப்பு விழாவிற்கு முன்பே தி.மு.க வினரின் அநாகரீகச் செயல்களால் சர்ச்சையில் சிக்கி உள்ளது.
பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த அரசு விழாவில், நடுநிலை தவறி தி.மு.க வின் தேர்தல் பிரச்சாரப் பாடல்கள் அலறவிடப்பட்டன.
பொதுமக்களின் வரிப் பணத்தில் கட்டப்பட்ட ஒரு பொதுக் கட்டமைப்பை, தங்கள் கட்சியின் விளம்பர மேடையாக மாற்றிய தி.மு.க வினரின் இந்தச் செயல் அங்கு இருந்தவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
அராஜகத்தின் உச்சமாக, பேருந்து நிறுத்தத்தின் பின்புறம் உள்ள வணிக வளாக வராண்டாவில், மதுப்பிரியர்கள் இருவர் பொதுமக்களுக்கு எவ்வித அச்சமுமின்றி சர்வ சாதாரணமாக மது அருந்திக் கொண்டு இருந்தனர்.
பொதுமக்கள் இந்த அவலத்தை வீடியோ எடுக்கத் தொடங்கியதும், அந்த நபர்கள் சிறிதும் கூச்சமின்றி நாங்களும் தி.மு.க காரர்கள் தான் என்று மார்தட்டிக் கொண்டு அங்கு இருந்து தப்பிச் சென்றனர்.
ஆளுங்கட்சி என்ற மிரட்டல் தொனியில் பொது இடத்தில் மது அருந்தி விட்டு, தங்களை தி.மு.கவினர் என்று அடையாளப்படுத்திக் கொண்டது, அக்கட்சியின் ஒழுக்கமின்மையையே காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பொதுமக்கள் வேதனை
அதிநவீன வசதியுடன் கூடிய பேருந்து நிறுத்தத்திற்காக காத்து இருந்த பெண்கள் மற்றும் முதியவர்கள், இந்த மது அரக்கர்களின் செயலால் முகம் சுளித்து அங்கு இருந்து விலகிச் சென்றனர். ஒரு நல்ல திட்டத்தைக் கூட முறையான கட்டுப்பாடோடு மக்களிடம் கொண்டு சேர்க்கத் துப்பில்லாத பேரூராட்சி நிர்வாகமும், மது அருந்துவதையே சாதனையாகக் கருதும் தி.மு.க தொண்டர்களும் சூலூர் மக்கள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தினர்.

0 கருத்துகள்: